×

முதல் டெஸ்ட் போட்டி: புஜாரா, ரகானே அரைசதம்..ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்கு

அடிலெய்டு: அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்னுடனும், ரகானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புஜாரா, ரகானே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். புஜாரா 140 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரகானே நிதானமாக விளையாடினார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் சீராக உயர்ந்து வந்தது. புஜாரா 204 பந்தில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரகானே உடன் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். ரகானே 111 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 4-வது நாள் மதிய உணவு இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்தது. இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாதன் லயன் ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசி அசத்தினார். ஆனால் அடுத்த ஓவரிலேயே 16 பந்தில் 28 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரகானே 70 ரன்னில் ஆட்டமிழந்தார். முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற இந்தியா 106.5 ஓவரில் 307 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளையும். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். தற்போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Test Match ,Bajara ,Rakana Haynes ,Australia , First Test Match,pujara, Rahane,half centuries,target,Australia
× RELATED `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட்...