×

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியல் மூலதனமாக பயன்படுத்தினார் : மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியல் மூலதனமாக பயன்படுத்தியதாக மோடி மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரை ஒட்டிய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடங்களை கடந்த 2016ம் ஆண்டு இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி தகர்த்தது. இதில், 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்போது வடக்கு மண்டல ராணுவ தளபதியாக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் ஹூடா நேற்று முன்தினம் சண்டிகரில் ராணுவ இலக்கிய விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், `மிக ரகசியமாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் மிகைப்படுத்தப்பட்டு அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது’ தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராணுவ தளபதியின் கருத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராகுல் தனது டிவிட்டர் பதிவில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளதாவது:

உண்மை பேசிய ராணுவ தளபதியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. ஆனால், மிஸ்டர் 36 (மோடி) நமது ராணுவத்தின் சொத்தை தனிநபருக்கு பயன்படுத்தியதற்காக வெட்கப்படவில்லை. அவர் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலை அரசியல் மூலதனமாக மாற்றியுள்ளார். மேலும், ரபேல் ஒப்பந்தம் மூலம் அனில் அம்பானியின் உண்மையான மூலதனத்தை ரூ.30,000 கோடியாக உயர்த்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், `நமது ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் அர்ப்பணிபை மோடி போன்று யாரும் அற்ப அரசியலுக்கு பயன்படுத்த மாட்டார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajkumar ,Modi , Political strike, Rahul Gandhi's ,allegations against Modi
× RELATED கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச...