×

வேதாரண்யம் அருகே கஜா புயல் தாக்குதலின்போது கலவரம் நள்ளிரவில் வீடு வீடாக சென்று கதவை உடைத்து 30 பேர் அதிரடி கைது

வேதாரண்யம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட  டெல்டா மாவட்டங்களில் 24 நாட்கள் ஆகியும் இன்னும் நிலைமை சீரடையவில்லை. மின்சாரம், குடிநீர் வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த 18ம் தேதி தலைஞாயிறு கடைத்தெருவில் அப்பகுதி மக்கள் நிவாரணம் கோரி சாலைமறியல் செய்தனர். மேலும் வீடுகளை இழந்தவர்கள் சந்தானம் தெருவில் சாலையோரத்தில் சமையலும் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சாலைமறியல் செய்தவர்கள் மீதும், சமையல் செய்தவர்கள் மீதும் தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசார் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பயங்கர கலவரம் உருவானது. போலீசாரின் 3 வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் காயமடைந்த 10 போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கலவரம் தொடர்பாக பலர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கேசவன் ஓடை, சிந்தாமணி தெரு, சந்தானம் தெரு பகுதிகளில் 100 போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் வீடு வீடாக கதவை உடைத்து உள்ளே புகுந்து தேடுதல் வேட்டை நடத்தினர். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன்(55), குமரன், செந்தில், ரமேஷ், மணிரத்தினம், அய்யப்பன், ரவீந்திரன் உள்பட 30 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சீர்காழி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து இளைஞர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். பெண்கள் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். வயதானவர்களும், குழந்தைகளும் மட்டும் தெருவில் நடமாடுகின்றனர். இதனால் தெருக்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் கைதான 30 பேரையும் நேற்று மாலை போலீசார் வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி திருமணி உத்தரவின்பேரில் அவர்களை 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

அமைச்சரை வெட்ட முயன்றவருக்கு வலை


கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களுக்கு முன் நாகை அருகே கருங்கண்ணி என்ற இடத்துக்கு புயல் பாதிப்பை பார்வையிடவும், மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரில் சென்றார். காரில் அமைச்சர் வந்ததை அறிந்ததும் அப்பகுதி இளைஞர்கள் சூழ்ந்து காரை கைகளால் தாக்கினர். இப்போதுதான் எங்கள் கிராமத்துக்கு வருகிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

கூட்டத்தில் ஒரு வாலிபர் அரிவாளுடன் அமைச்சரை வெட்ட பாய்ந்துள்ளார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அமைச்சர் அந்த பகுதியை பார்வையிடாமல் திரும்பி சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சி வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அரிவாளுடன் வந்தவர் யார் என்றும், அவரை பிடிக்கவும் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,storm ,Vedaranyam ,Kajan , Incident occurred ,r Vedaranyam, Kajan storm.
× RELATED 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை,...