×

தமிழக விரைவு போக்குவரத்து கழகத்துக்கு போட்டியாக ஆம்னி பஸ் கட்டணம் திடீர் குறைப்பு

சென்னை: ‘எஸ்இடிசி’ அரசு பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, ‘ஆம்னி’ பஸ்களின் கட்டணமும் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோர் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) சார்பில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், ‘கிளாசிக்’ (ஏசி அல்லது டாய்ெலட் வசதி ெகாண்ட பஸ்), அல்ட்ரா டீலக்ஸ் (ஏசி அல்லாத பஸ்), ஏசி பஸ், ஏசி சீட்டர், ஏசி சிலிப்பர், ஏசி அல்லாத சிலிப்பர் ஆகிய வகையிலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் பஸ்களில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட  பஸ்களுக்கு, ஒரு கிலோ மீட்டருக்கு, இரண்டு  ரூபாய் 25 பைசா நிர்ணயம்  செய்யப்பட்டது. மேலும், சாதாரண படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு, 1.55 பைசா,  கழிப்பிட வசதியுடன் கூடிய ‘கிளாசிக்’ பஸ்களுக்கு, 1.15 பைசாவும் கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அரசு பஸ்களுக்கு போட்டியாக இயக்கப்படும் தனியார் ‘ஆம்னி’களில் கட்டணம் குறைவாக இருந்தது. மேலும் வேகமான பயணம், நல்ல பராமரிப்பு ஆகியவற்றின் காரணமாக, பயணிகள் ‘ஆம்னி’ பஸ்களை பொதுமக்கள் நாடி சென்றனர். இதனால், அரசு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் குறைந்து வந்தது. இதையடுத்து திங்கள் முதல் வெள்ளி வரை ‘எஸ்இடிசி’ பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டும், மற்ற நாட்களில் பழைய கட்டணத்தை வசூலிக்கவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருக்கிறார்.  அதன்படி வார நாட்களில் குளிர்சாதன படுக்கை பஸ்களுக்கு கி.மீக்கு முந்தைய கட்டணத்தில் இருந்து, 45 பைசா குறைத்து, 1.85 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சாதாரண படுக்கை வசதி கொண்ட பஸ்களுக்கு 20 பைசா குறைத்து, 1.35 பைசாவாகவும், கிளாசிக் பஸ்களுக்கு, 10 பைசா குறைத்து, 1.05 பைசாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வார நாட்களில் மொத்த கிலோ மீட்டர் அடிப்படையில், 25 முதல் 350 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனால் ‘ஆம்னி’ பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகளை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தனர். இதன்விளைவாக தற்போது ‘ஆம்னி’ பஸ்களிலும் கட்டணம் குறைந்துள்ளது. தற்போது அரசு எஸ்இடிசி பஸ்களுக்கும், ஆம்னி பஸ்களுக்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோர் நிம்மதியை சந்தித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த தனியார் ‘ஆம்னி’ பஸ்களில் நான் ஏசி சீட்டர் 900 ஆக இருந்தது. தற்போது, 600 ஆக குறைந்துள்ளது.
அதேபோல், ஏசி சிலிப்பருக்கு, 1,200 வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 745 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை- மதுரைக்கு நான் ஏசி சீட்டரில் 600 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 449 ஆக குறைந்துள்ளது. அதேபோல் ஏசி சிலிப்பருக்கு 800 கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 550 ஆகவும், சென்னையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த நான் ஏசி சீட்டர் பஸ்களில் 550ல் இருந்து 350 ஆகவும், ஏசி சிலிப்பரின் கட்டணம் 700ல் இருந்து 399 ஆகவும் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களிடத்தில் ‘ஆம்னி’ பஸ்களுக்கு மீண்டும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

அரசு பஸ்சில் டிக்கெட் முன்பதிவு

அரசு ‘எஸ்இடிசி’ பஸ்களில் பயணம் செய்ேவார், அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் www.tnstc.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ள முடியும். தற்போது ‘ஆம்னி’ பஸ்களுக்கு போட்டியாக சில தனியார் டிக்ெகட் முன்பதிவு இணையதளங்களில், அரசு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். இது பயணிகளிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu Quick Transport Corporation , Omni bus fare , competition, Tamilnadu Quick Transport Corporation
× RELATED கேரளாவுக்கு அரசு பஸ்சில் கஞ்சா...