×

மறைமுக மதுவிற்பனையை தடுக்க இனி நள்ளிரவிலும் ரெய்டு: டாஸ்மாக் அதிகாரிகள் வியூகம்

சென்னை: மறைமுக மதுவிற்பனையை தடுக்க இனி நள்ளிரவிலும் தீவிர ஆய்வினை மேற்கொள்ள டாஸ்மாக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மறைமுக மதுவிற்பனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த புகார்கள் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கிறது. இந்த  மறைமுக மதுவிற்பனை மூலம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. குறிப்பாக, மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட  வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால், நகரங்களை தவிர மற்ற இடங்களில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இதேபோல், பலர்  அதிகாலை நேரங்களிலும் மறைமுக மதுவிற்பனை செய்து வருகின்றனர்.இதை தடுக்க டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்கள் தலைமையில் கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம்  நடைபெற்ற மாதாந்திர ஆய்வுகுழு கூட்டத்தில் மறைமுக மதுவிற்பனையை தடுக்க ஒவ்வொரு அதிகாரியும் எடுத்த நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாதாந்திர ஆய்வு குழு  கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவையடுத்து அதிகாரிகள் நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். ஆனாலும், இரவு நேரம், மற்றும் அதிகாலை நேரத்தில் நடைபெறும் மறைமுக மதுவிற்பனையை தடுப்பதில்  தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மறைமுக மதுவிற்பனையை தடுக்க நள்ளிரவு நேரங்களிலும் ஆய்வு செய்ய டாஸ்மாக் அதிகாரிகள்  திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் நடக்கும் மதுவிற்பனையை தடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை புறநகர் பகுதிகளில் நாள்தோறும் மறைமுக மதுவிற்பனை என்பது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தது 50 முதல் 80 வரையிலான நபர்கள் பிடிபடுகிறார்கள்.  பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே ஆய்வினை நடத்தி வந்தோம். புகார் வரும் போது இரவு நேரங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வந்தோம். இந்நிலையில், வரும் நாட்களில் நள்ளிரவு  12 மணி முதல் திடீர் ஆய்வை மேற்கொள்ள உள்ளோம். இதேபோல், அதிகாலை நேரங்களிலும் திடீர் ஆய்வினை செய்ய உள்ளோம். இதனால், மறைமுக மதுவிற்பனையை குறைக்க முடியும்.இவ்வாறு கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Raid,Taskmakers,Official,Strategy
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100