×

சிறப்பு வழிபாட்டுக்காக இஸ்ரேல் நாட்டவர் வருகை: கொடைக்கானலில் போலீசார் குவிப்பு

கொடைக்கானல்: இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் கூடுதல் போலீஸ், வாகன சோதனை என பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த 2017, ஆக.11ம் தேதி கேரள மாநிலத்தை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மஞ்சித் மெஹபூப், சாலிக் முகமது, ரஷீத் அலி, சக்குவான், ஜசீம், ராம் சத், சஜிர் மங்கலசேரி, மொயின் ஆகிய 8 பேர் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் தங்கி, இங்குள்ள இஸ்ரேல் நாட்டவர்களை கொல்ல திட்டமிட்டது தெரிந்தது.

இதைத் தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் நிரந்தர போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. வட்டக்கானல் பகுதிக்கு வரும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூத மதத்தினர் டிச.25 முதல் ஒரு வாரம் வரை ‘காபாத்’ எனும் சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனை நடத்த இவர்களின் மதத்தலைவர் ஒருவர் வந்து செல்வார்.இதையொட்டி தற்போது கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டவர்களின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டக்கானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதிக்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. இவர்களுடன் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் எஸ்பி சக்திவேல் கூறுகையில், ‘‘கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

சிசிடிவி உள்ள தங்கும் விடுதிகளில்தான் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை சரி செய்து படிவம் ‘சி’யை பூர்த்தி செய்து, கொடைக்கானல் காவல்நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிப்ரவரி மாதம் வரை கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : visitor ,Israeli ,Kodaikanal , Special worship, Israel, Kodaikanal, police concentration
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்