×

வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பாழடைந்த கட்டிடங்களை அகற்றுவதற்கு அனுமதி கேட்டு 2 ஆண்டுகள் காத்திருப்பு

* மருத்துவமனையை தரம் உயர்த்துவதில் இழுபறி

வேலூர் : வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் பாழடைந்த கட்டிடங்களை அகற்றுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து அதிகாரிகள் 2 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், மருத்துவமனையை தரம் உயர்த்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் குறிப்பிட்ட சில நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துகளால் படுகாயமடைந்தவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இதுதவிர மாவட்ட சித்த மருத்துவமனை உட்பட, யுனானி, ேஹாமியோபதி ஆகிய பாரம்பரிய சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. அதன்படி, தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுவதற்கு முன்பு, இங்குதான் மாவட்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கேற்ப இங்குள்ள ஏராளமான பழைய கட்டிடங்கள் இருக்கின்றன. இந்த கட்டிடங்களை அகற்றினால்தான், மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கான பணிகள் மேற்கொள்ள முடியும். எனவே, இவ்வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை அகற்றுவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்காததால் அடுத்தகட்ட பணிகளை தொடங்குவதில் இழுபறி நீடிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வேலூர் அரசினர் பென்ட்லண்ட் மருத்துவமனையில் ஏராளமான பாழடைந்த கட்டிடங்கள் இருக்கின்றன. இந்த கட்டிடங்கள் இடிந்து விழும் அபாய நிலையில் காட்சியளிக்கின்றன. மேலும் பராமரிப்பின்றி, கட்டிடங்களில் பழைய பொருட்கள், ஆவணங்கள் வீசப்பட்டுள்ளது. மேலும் கட்டிடங்களின் மேற்கூரைகள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால், மழைநீர் தேங்கி கட்டிடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாழடைந்த கட்டிடங்களை அகற்றவும், புதிய கட்டிடங்களுடன் மருத்துவமனையை தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore Government ,buildings ,removal ,Bentland Hospital , Vellore ,Government Hospital,Old Building ,Destroyed
× RELATED டவுன் சின்ட்ரோம் பாதித்த குழந்தைகளை...