×

குன்னூரில் நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த கட்டிடத்தில் மீண்டும் கட்டுமான பணி

குன்னூர் : குன்னூரில் சீல் வைக்கப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான கட்டிடத்தில் மீண்டும் கட்டுமான பணி நடப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1993ம் ஆண்டு மாஸ்டர் பிளான் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் 7 மீட்டருக்கு மேல் கட்டிடம் கட்ட கூடாது. 1500 சதுர அடிக்குள் கட்டிடம் கட்ட வனத்துறை, வேளாண் பொறியியல்த்துறை உள்ளிட்ட துறைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

 இருப்பினும் மாஸ்டர் பிளான் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதியின்றியும் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றன.  இதையடுத்து குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மற்றும் விதிமீறிய கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

 குன்னூர் நகராட்சி கமிஷ்னர் சரஸ்வதி உத்தரவின் பேரில் நகர திட்ட அலுவலர் மதியழகன், கட்டிட ஆய்வாளர் ராஜ்குமார் உட்பட ஊழியர்கள் ஆய்வு செய்து சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.   குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஆளும்கட்சி பிரமுகரின் கட்டிட வளாகம், தேசிய கட்சி பிரமுகர் ஒருவர் நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடம் உட்பட 3 கட்டிடங்களுக்கு நேற்று முன்தினம் சீல் வைத்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மவுண்ட் பிளசண்ட் பகுதியில் ஒருவர் 4க்கும் மேற்பட்ட தனித் தனி கட்டிட அனுமதிகளை பெற்று கொண்டு  அதனை இணைந்து ஒரே அபார்ட்மென்ட்டாக மாற்றியுள்ளார். மேலும் அங்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து வந்ததால், அருகில் உள்ள நகராட்சி நீர்தொட்டியில் தண்ணீர் குறைந்து போனதும் தெரிய வந்தது. இதேபோல் நகராட்சியின் சுடுகாடு நிலத்தை ஆக்கிரமித்து ஒருவர் கட்டிடம் கட்டியுள்ளார்.

இக்கட்டிடம் உட்பட 3 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது, என்றனர்.  இதற்கிடையில் மவுண்ட்பிளசண்ட் பகுதியில் சீல் வைக்கப்பட்ட ஆளுங்கட்சி பிரமுகரின் கட்டிடத்தில் நேற்று மீண்டும் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : building ,quarry ,Kunar , Coonoor ,Sealed Building, renovation, Government
× RELATED சிலந்தியாற்றில் கட்டப்படுவது...