×

மேகதாது விவகாரம் : மத்திய அரசு அனுமதியை எதிர்த்து புதுச்சேரியும் வழக்கு தொடர்ந்தது

புதுடெல்லி: மேகதாது அணையின் திட்ட வரைவுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தை தொடர்ந்து புதுவை மாநில அரசும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5 ஆயிரத்து 912 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் அணை கட்டும் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி கண்டன தீர்மானமும் நிறைவேற்றியது.

மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரியும், அது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இந்த 2 மனுக்களும் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளன. தமிழகத்தை தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் புதுவை அரசும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கை நேற்று தொடர்ந்துள்ளது. அதில், ‘காவிரியின் நடுவே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது. மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை உடனடியாக நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவையும் அடுத்த வாரம் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரிகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Puducherry ,government , Meghatadu Dam, Project Draft, Puducherry, Case
× RELATED மருத்துவரின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி