×

ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி 64 அடி சிலையை கொண்டு சென்ற லாரி டயர்கள் வெடித்தன

வந்தவாசி:  ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 64 அடி உயர பெருமாள் சுவாமி சிலையை பெங்களூருக்கு எடுத்து சென்ற கார்கோ லாரியின் டயர்கள் வெடித்ததால் வேடிக்கை பார்த்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். பெங்களூரு கோதண்டராம சுவாமி தேவஸ்தான கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான தெற்கு பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஒரே கல்லிலான பாறையை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சுவாமி சிலை செய்ய சுமார் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரமுள்ள சுமார் 380 டன் எடையுள்ள கற்பாறையும், ஆதிசேஷன் சிலை செய்ய சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரமுள்ள சுமார் 230 டன் எடையுள்ள கற்பாறையும் அறுத்து எடுக்கப்பட்டது. இதில் ஒரு பாறையில் பெருமாளின் முகம், சங்கு சக்கரம், கைகள் ஆகியவை செதுக்கப்பட்டது. தொடர்ந்து 2 கற்பாறைகளையும் கார்கோ லாரிகளில் பெங்களூருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து,  கடந்த 4 நாட்களுக்கு முன் பாறை வெட்டி எடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் எடுத்து செல்லப்பட்டது. நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் லாரி மூலம் இயக்கியபோது மண் சாலைக்குள் டயர்கள் சிக்கியது. இதில்  சிலையின் பாரம் தாங்காமல் 6 டயர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அதன்பிறகு வெடித்த டயர்களுக்கு பதில் வேறு மாற்றி விட்டு புதைந்த  இடத்தில் லாரி சக்கரம் மண்ணில் சிக்காத வகையில் சக்கரத்தின் கீழ் பகுதியில் இருப்பு தகடுகளும், கற்களையும் கொட்டி சாலை அமைத்தனர். இதையடுத்து 60 மீட்டர் தூரம் வரை கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

 இதற்கிடையே நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘இந்த சிலை இங்கிருந்து தெள்ளார்- தேசூர் நெடுஞ்சாலை, திண்டிவனம்- வந்தவாசி நெடுஞ்சாலை வழியாக திண்டிவனம்- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை அடைந்து அங்கிருந்து செஞ்சி, திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்கிறது. குறைந்தது 50 நாட்களாகும்’ என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,Vishwaroopa Kothandarama Swamy , Kothandaramam Swamy Swamy Statue, Larry Tire, People's flow
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை