×

கடைசி நாளில் 156 ரன்னில் சுருண்டு பாக். தோல்வி தொடரை வென்று நியூசிலாந்து சாதனை

அபுதாபி: அபுதாபி டெஸ்டின் கடைசி நாளில் பாகிஸ்தான் தனது 2வது இன்னிங்சில்  156 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 274, பாகிஸ்தான் 348 ரன் எடுத்தன. 74 ரன் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் அபாரமாக ஆடினர். 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 272 ரன்களுடன் இருந்தது. வில்லியம்சன் 139, நிக்கோல்ஸ் 90 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஹசன் அலி வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் வில்லியம்சன் (139) ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் நிக்கோல்ஸ் சதம் அடித்தார். யாசிர் ஷா சுழலில் கிராண்ட்டோம் (26), வால்டிங் (0) அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி 113 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 353 ரன் குவித்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 126, சவுத்தீ 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு 280 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், நியூசிலாந்தின் அனல்பறக்கும் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் தடம் புரண்டது. முகமது ஹபீஸ் (8) சவுத்தீ வேகத்திலும், அசார் அலி (5) கிராண்டோம் பந்திலும் வெளியேறினர். அறிமுக பந்துவீச்சாளர் சோமர்வில்லி, ஹரிஸ் சோகைல் (9), ஆசாத் சபிக் (0) விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தார். 55 ரன்னில் 5 விக்கெட் பறிபோன நிலையில், பாபர் அசம் (51) மட்டும் ஓரளவுக்கு தாக்குபிடித்து அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற, பாகிஸ்தான் அணி 156 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 123 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து தரப்பில் சவுத்தீ, சோமர்வில்லி, படேல் தலா 3 விக்கெட்டும், கிராண்டோம் 1 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதித்தது. ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் வில்லியம்சனும், தொடர் நாயகனாக பாகிஸ்தானின் யாசிர்ஷாவும் அறிவிக்கப்பட்டனர்.

49 ஆண்டுக்குபின் கிடைத்த வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி 49 ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று சாதித்துள்ளது. இதற்கு முன், நியூசிலாந்து அணி 1969ம் ஆண்டில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. அதன் பிறகு 13 தொடர்களில் பாகிஸ்தான் வென்றுள்ளது. 6 தொடர் டிராவில் முடிந்தன. மேலும், ஆசிய மண்ணில் 2008ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand , Last day, New Zealand ,defeating the defeat
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...