×

தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சை பெரியகோயில் தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமாக திகழ்கிறது. வெளிநாட்டவர்களும், பிற மாநிலத்தவர்களும் விரும்பி பார்க்கும் இடம் தஞ்சை பெரிய கோயில். சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் ஆயிரமாவது ஆண்டில் கட்டிய பெரிய கோயில் தமிழ்நாட்டின் கட்டிட கலைக்கு மிக முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது. இந்த தஞ்சை பெரிய கோவிலில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தியான நிகழ்ச்சி நாளை முதல் 2 நாட்கள் நடைபெறவுள்ளது. வாழும் கலை அமைப்பு சார்பில் இந்த தியான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஏற்கனவே, டெல்லியில் உள்ள யமுனை கரையில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியவர். யமுனையின் சுற்றுச்சூழலை கெடுத்ததாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது அப்போது புகார் கூறப்பட்டது. சுற்றுச்சூழலை கெடுத்ததற்காக பசுமை தீர்ப்பாயம் ரவிசங்கருக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது. எனவே, பெரிய கோயிலில் ரவிசங்கர் நிகழ்ச்சி நடத்தப்போவதை அறிந்த தஞ்சாவூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, இந்த மனுவை அவசர வழக்காக இன்று பிறபகல் விசாரித்தது. அப்போது, தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் அருகே பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் பழமையும், பாரம்பரியமும் மிக்க கோவில். யுனெஸ்கோவால் சோழர்களின் சிறப்பான கோவில் என்ற சிறப்பை பெற்றது. ஆனால் இதுபோன்ற தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கையாக உள்ளது என கூறிய வழக்கறிஞர், ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.

அவரது வாதத்தை ஏற்ற நீதிமன்றம், தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் தியான நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவி்ட்டுள்ளது. மேலும், இவ்விரு நாட்களிலும், எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை என்பதையும், கோவில் வளாகத்தினுள் பந்தல்கள், கூடாரங்கள் உள்ளிட்டவை முழுமையாக அகற்றப்பட்டது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Srisaila ,Tanjore Big Temple: High Court , Tanjore Big Temple, Sri Sri RaviShankar,meditative event,High Court branch
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ