×

பருவநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன்டை ஆக்சைடு அதிகம் வெளியிடும் இந்தியா: ஆய்வு முடிவில் அதிர்ச்சி

புதுடெல்லி: பருவநிலை மாற்றத்திற்கு காரணமான கார்பன்டை ஆக்சைடு (சிஓ2) வாயுவை அதிகளவில் வெளியிடும் உலக நாடுகளில் இந்தியா 4வது இடத்தை பெற்றிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணம் காற்றில் கலக்கும் கார்பன்டை ஆக்சைடு வாயுதான். நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் பயன்பாட்டினால் கார்பன்டை ஆக்சைடு வெளியாகிறது. இந்த கார்பன்டை ஆக்சைடை அதிகளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 4வது இடத்தை பெற்றிருப்பதாக உலக கார்பன் ஆய்வு முடிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வில கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2017ம் ஆண்டில், கார்பன்டை ஆக்சைடை அதிகளவில் வெளியிட்ட நாடுகளில் சீனா (27 சதவீதம்), அமெரிக்கா (15 சதவீதம்), ஐரோப்பிய யூனியன் (10 சதவீதம்), இந்தியா (7 சதவீதம்) ஆகியவை முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. மொத்த கார்பன்டை ஆக்சைடில் 59 சதவீதம் இந்த 4 நாடுகள் வெளியிட்டவை. டாப்-10 இடங்களில் முறையே, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மணி, ஈரான், சவுதி அரேபியா, தென் கொரியா இடம் பெற்றுள்ளன. மீதமுள்ள நாடுகள் 41 சதவீத கார்பன்டை ஆக்சைடை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் கார்பன்டை ஆக்சைடை வெளியிடும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2018ல் 6.3 சதவீதம் அதிகரிக்கும். நிலக்கரியால் 7.1 சதவீதம், எண்ணெயால் 2.9 சதவீதம், எரிவாயுவால் 6 சதவீதமாக அதிகரிப்பு இருக்கும். கார்பன்டை ஆக்சைடு வெளியிடுவதை குறைப்பது தொடர்பாக, 2015 பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் நிர்ணயித்த இலக்கை எட்டியுள்ளன.

ஆனாலும், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இப்போதும் மின் உற்பத்திக்கு அதிகளவில் நிலக்கரியை நம்பி உள்ளன. நிலக்கரி பயன்பாடே கார்பன்டை ஆக்சைடு அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, சூரிய மின் ஆலைகள் அமைப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,climate change , Climate, carbon dioxide, India
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு