×

அடிலெய்டில் ஆஸி. பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்: சதம் அடித்து அணியை மீட்ட புஜாரா

அடிலெய்டு: அடிலெய்டு டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம், இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. புஜாரா தனி ஆளாக போராடி சதம் விளாசி, அணிக்கு கவுரவமான ஸ்கோரை பெற்றுத்தந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களுடன் உள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. கே.எல்.ராகுல், முரளி விஜய் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஏற்கனவே மோசமான பார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் இம்முறையும் சொதப்பினார். 2 ரன்னில் ஹேசல்வுட் வேகத்தில் ஆட்டமிழந்தார். பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த முரளி விஜய் வெறும் 11 ரன்னில் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார். கேப்டன் கோஹ்லி (3), ரகானே (13) அணிக்கு கைகொடுக்கவில்லை. 41 ரன்னில் 4 விக்கெட் பறிபோன நிலையில், ரோகித் ஷர்மா வழக்கமான அதிரடியை காட்டினார். 3 சிக்சர்கள் விளாசிய அவர் 37 ரன் சேர்த்த நிலையில் லியான் சுழலில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 89 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாற்றம் கண்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் புஜாரா தனி ஆளாக அணியை மீட்க போராடினார். ரிஷப் பன்ட் (25), அஷ்வின் (25) இருவரும் ஓரளவுக்கு தாக்குபிடித்து, புஜாராவுக்கு ஒத்துழைப்பு தந்தனர். இதன் மூலம், ஒருமுனையில் நங்கூரமிட்ட புஜாரா, ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 231 பந்தில் சதம் அடித்த அவர் அதன் பின் வேகமாக ரன் சேர்க்க முயன்றார். அணிக்கு 2 விக்கெட் மட்டுமே கைவசம் இருந்ததால், புஜாரா பவுண்டரிகளை விளாசினார்.

அவர் 123 ரன் சேர்த்த நிலையில் கம்மின்சின் அபார த்ரோவால் ரன் அவுட்டாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களுடன் உள்ளது. முகமது ஷமி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹேசல்ட், கம்மின்ஸ், லியான் தலா 2 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது. இக்கட்டான கட்டத்தில் நிதானமாக ஆடி, சதம் அடித்து அணிக்கு கவுரவமான ஸ்கோரை பெற்றுத் தந்த புஜாராவை சச்சின், சேவக், லட்சுமணன் உள்ளிட்ட முன்னாள் நட்சத்திரங்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.

கங்குலியை சமன் செய்தார்
புஜாரா டெஸ்டில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் கங்குலியை அவர் சமன் செய்துள்ளார். 133 டெஸ்டில் விளையாடிய கங்குலி 16 சதம், 35 அரை சதம் அடித்துள்ளார். புஜாரா தனது 65வது டெஸ்டிலேயே 16வது சதத்தை எட்டியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவில் முதல் நாளில் சதம் அடித்த 6வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். விஜய் மஞ்ச்ரேக்கர், சச்சின், சேவக், விராத் கோஹ்லி (2 முறை), முரளி விஜய் ஆகியோர் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் நாளில் சதம் அடித்தவர்கள் ஆவர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,Bowlers ,Adelaide ,team , Bajara, Australia, India team
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...