×

கர்நாடகா, கேரளாவுக்கு கடத்தப்படுகிறது அரசு புதிய குவாரி திறக்காததால் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை: லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குற்றச்சாட்டு

நாமக்கல்: தமிழகத்தில் ஒரே ஒரு மணல் குவாரி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. புதிய மணல் குவாரி திறக்காததால் காவிரி ஆற்றில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது என மாநில மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி, நாமக்கல்லில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில்  அரசு மணல் குவாரிகளை இயக்குவதில், பொதுப்பணித்துறை படுதோல்வி அடைந்துள்ளது.  தற்போது தமிழகத்தில் ஒரேயொரு அரசு மணல் குவாரி, நாமக்கல் மாவட்டம்  குமரிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் தினமும் 200 லோடு  மட்டுமே மணல் கிடைக்கிறது. தமிழகத்தின் தினசரி தேவை 30 ஆயிரம் லோடுகள்.தமிழகத்தில்  புதிதாக 26 அரசு மணல் குவாரிகளை திறக்க மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு  ஆணையம் அனுமதியளித்தும், புதிய குவாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன்  மூலம் மணல் புக்கிங் துவங்கப்பட்ட 2 மாதம் மட்டும் முறைகேடு இன்றி மணல்  லோடு கிடைத்தது. 5 மாதத்துக்கு முன் ஆன்லைனில் புக்கிங் செய்து, மணல்  லோடுக்கு பணம் கட்டியும் இன்னும் 55 ஆயிரம் லாரிகளுக்கு மணல் லோடு  கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் முடங்கியதுடன், மணல் லாரி உரிமையாளர்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விலை அதிகமாக இருப்பதால், சாதாரண மக்களால் அந்த மணலை வாங்க முடியவில்லை.

காவிரி  ஆற்றில் கடந்த இரு மாதத்துக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பல புதிய  மணல் திட்டுகள் தோன்றியுள்ளன. எனவே, தமிழக அரசு புதிய மணல் குவாரிகளை  தேவையான அளவு திறந்து, குறைந்த விலையில் மக்களுக்கு மணல் கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். மணல் குவாரி திறக்கப்படாததால், காவிரி  ஆற்றில் மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது. கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு  தினமும் மணல் கடத்தப்பட்டு வருகிறது. மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி,  தமிழகத்தில் 300 நிறுவனங்கள் எம். சாண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்து  வருகின்றன. இதில் 50 நிறுவனங்கள் மட்டுமே முறைப்படி பொதுப்பணித்துறையிடம்  அனுமதி பெற்றுள்ளன. மற்ற நிறுவனங்கள் அதிக விலைக்கு தரமற்ற எம் சாண்டை  விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை  எடுக்கவேண்டும். இவ்வாறு செல்ல. ராசாமணி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka ,river ,Kerala Cairn ,quarry ,Cauvery ,Larry Owner Federation Chairperson , Karnataka , transported , Kerala, quarry,Cauvery river, Charging leader ,lorry owner
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்