×

குழித்துறை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா?: பயணிகள் கோரிக்கை: அதிகாரி கைவிரிப்பு

கருங்கல்: குழித்துறை ரயில் நிலையத்தை தினசரி 100க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். நாகர்கோவிலுக்கு அடுத்த படியாக அதிக வருமானத்தை இந்த ரயில் நிலையம் ஈட்டி தருகிறது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் பயன்பாட்டுக்காக எடுக்கப்படும் குடிநீர் கிணறை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது.  இந்த ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், ஆண்கள், பெண்களுக்கான கழிவறை, ஒரு ஆண்டு ஆகியும் திறப்பு விழா காணாமல் தவிக்கிறது. திருட்டு பயமும் இங்கு அதிகரித்துள்ளது. சுமார் 25 பைக்குகள் இதுவரை திருடு போகியுள்ளது. இதனால் குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வேலை செய்யும் பலரும் ரயில் நிலையத்தில் பைக்குகளை நிறுத்த அச்சப்படுகின்றனர்.

 இந்த ரயில் நிலையம் வழியாக திருநெல்வேலி- விலாஸ்பூர் ரயில், நாகர்கோவில்- சாலிமார் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்- காந்திதாம் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி- திபரூகர் எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரயில்கள் வாராந்திர ரயில்களாக இயக்கப்படுகிறது.  அனைத்தும் விரைவு ரயில் என்பதால் இங்கு நிற்பது இல்லை. இந்த ரயில்களைகுழித்துறையில் நிறுத்த வேண்டும் என்று பல வருடங்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ரயில்வே நிர்வாகம் இதுவரை செவி சாய்க்கவே இல்லை. இதே போல் அடிப்படை வசதிகள் என்பதும் குழித்துறை ரயில் நிலையத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பயணிகள் முறையிட்டுள்ளனர். அப்போது தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என அதிகாரிகள் கைவிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்களது பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : facilities ,railway station ,Officer ,Kuzhithurai , Kulithurai Railway Station, Basic Facilities, Passenger, Officer Handling
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!