×

பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ‘ஈ’ தாக்குதலில் தென்னைகள் பாதிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளில் வெள்ளை ஈ தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிரமங்களில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என அடுத்தடுத்து மழை பெய்யும்போது, தென்னை சாகுபடிக்கான தொழில் நுட்பங்களை விவசாயிகள் அதிகம் கையாளுகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் கொச்சி, திருச்சூர், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட தென்னைகளுக்கு ‘லேவிங்ஸ்பர்க்’ எனும் தென்னை வாடல்நோய் பரவியது. தொடர்ந்து அந்நோய், தமிழக எல்லையை ஒட்டிள்ள பொள்ளாச்சியில் பகுதி கிராமங்களில், தென்னை மரங்களில் வாடல் நோய் வேகமாக பரவியது.

அந்த சமயத்தில் ஆய்வு நடத்திய வேளாண்மை அதிகாரிகள், நோய் தாக்கிய மரங்களை வெட்ட உத்தரவிட்டனர். இது விவசாயிகளிடையே பெரும் வேதனையை உண்டாக்கியது. பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னைகளை வெட்டி அப்புறப்படுத்திய அவலம் ஏற்பட்டது. இந்நிலையில், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் ஏற்பட்டது. தென்னை வாடல் நோயை தொடர்ந்து, வெள்ளை ஈ தாக்குதலால் விவசாயிகள் மேலும் வேதனையடைந்தனர்.பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம், மணக்கடவு, மீனாட்சிபுரம், நல்லூத்துக்குளி, ஜலத்தூர், முத்தூர், தாளக்கரை, கஞ்சம்பட்டி, நெகமம் உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னைகளில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் ஏற்பட்டு, அதன் ஓலைகள் காய்ந்த நிலையில் உள்ளது. மேலும், வெள்ளை ஈ தாக்கம் ஏற்பட்ட மரங்களில் வளர்ச்சி குறைந்ததுடன், தேங்காய் உற்பத்தி நின்று போன அவலம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய வெள்ளை ஈ தாக்குதலில் இருந்து தென்னை மரங்களை காப்பாற்ற, வேளான் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், தென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளை ஈ தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் தென்னை உற்பத்தி மிகவும் குறைவதுடன், தென்னை விவசாயம் பாழ்பட்டு போகும் அவலம் உண்டாகும். எனவே, தென்னையில் வெள்ளை ஈ பரவலை தடுக்க, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Crows ,attack ,area ,Pollachi , Pollachi, white 'e', coconuts
× RELATED பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி...