×

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற உத்தரவு

சென்னை : நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சேலம் வருவாய் கோட்டாட்சியர் ஆக்கிரமிப்பை அகற்ற ஆணையிட்டுள்ளார். குறிஞ்சி மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்க நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. வரும் 10-ம் தேதி முதல் குறிஞ்சி மருத்துவமனை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை

சேலம் மையப்பகுதியில் அமைந்துள்ள குறிஞ்சி மருத்துவமனையானது இஸ்மாயில் கான் ஏரியில் இருந்து வரும் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டியுள்ளதாக  பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் பெய்த கனமழை காரணமாக குறிஞ்சி மருத்துவமனைக்கு பின்புறத்தில் இருக்கக்கூடிய வீடுகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் குறிஞ்சி மருத்துவமனையின் ஆக்கிரமிப்புக் கட்டிடப் பகுதியை இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 100 அடி நீளம் 20 அடி அகலம் 50 அடி உயரம் உள்ள கட்டிடம் வரும் 10ம் தேதி இடித்து அகற்றப்படும் என மருத்துவமனையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

 வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளை வரும் 7ம் தேதிக்குள் வேறு மருத்துவமனைக்கு மாற்ற வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, உள் நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதே தினத்தன்று இஸ்மாயில்கான் ஏரியின் கோடிவாய்க்கால் நீர் வழிப் புறம்போக்கில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அப்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஆக்கிரமிப்பாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் மாவட்ட வருவாய்த்துறையும் சேலம் மாநகராட்சியும் அறிவித்துள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem Kurichi Hospital ,watershed , kurinji hospital, salem,lake,high court
× RELATED கோவையில் நடைபெறும் திறன் மேம்பாட்டு...