திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் : செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்க சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலையில் இறைவனே மலை (கிரி) வடிவில் காட்சியளிப்பதால், பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் மலையை வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுவது வழக்கம். தமிழ் மாதப்பிறப்பு நாட்களில் மலை வலம் வருவது நூற்றாண்டு கால வழக்கமாக இருந்தது. கடந்த 25 ஆண்டுகளாக, பவுர்ணமியில் கிரிவலம் செல்வது பிரபலம் அடைந்தது. எனவே, மாதப்பிறப்பு கிரிவலம் குறைந்து, பவுர்ணமி கிரிவலம் புகழ் பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் எனும் புதிய நடைமுறை அறிமுகமாகியிருக்கிறது. கிரிவலப்பாதையின் எட்டு திசைகளிலும் அஷ்ட லிங்க சன்னதிகள் அமைந்துள்ளன. அதில், ஏழாவதாக அமைந்திருக்கிறது குபேர லிங்க சன்னதி. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில், குபேரன் கிரிவலம் செல்வதாக நம்பிக்கை. செல்வத்துக்கு அதிபதியான குபரேன் கிரிவலம் செல்லும்போது, நாமும் இணைந்து கிரிவலம் சென்றால் செல்வம் பெருகும், கடன் சுமை குறையும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், கடந்த சில ஆண்டுகளாக கார்த்திகை மாதம் சதுர்த்தசி திதி நாளில், குபேர கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு குபேர கிரிவலம் செல்ல உகந்த நேரம், நேற்று மதியம் 12.47 மணிக்கு தொடங்கி, இன்று மதியம் 12.41 மணி வரை என ஜோதிடர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை குபேரனுக்கு உகந்த வழிபாடு நேரம் எனவும், அந்த நேரத்தில் குபேர லிங்க சன்னதியில் நடைபெறும் சிறப்பு பூஜையை தரிசித்துவிட்டு, அங்கிருந்து கிரிவலம் தொடங்க வேண்டும் எனவும் தகவல்கள் பரவியது. அதனால், நேற்று மதியம் 2 மணியில் இருந்தே ஏராளமான பக்தர்கள் குபேர லிங்க சன்னதியில் குவியத் தொடங்கினர். எனவே, பக்தர்கள் வரிசையை ஒழுங்குப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பக்தர்கள் குபேரனை வழிபட்டனர். தொடர்ந்து, குபேர லிங்க சன்னதியில் இருந்து தொடங்கி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதுபோன்ற கிரிவலம் செல்லும் நடைமுறை அண்ணாமலையார் கோயில் ஆன்மிக வழக்கத்தில் இல்லை. ஆனாலும், சில ஆண்டுகளாக குபேர கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் நேற்று கிரிவலம் சென்றது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>