×

ஓசூர் வனத்தையொட்டிய கிராமங்களுக்குள் புகுந்து நெல், தக்காளி தோட்டத்தை துவம்சம் செய்த யானைகள்

ஓசூர்: ஓசூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. இதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் 2 யானைகள் வந்தன. அதேபோல் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள ஒற்றை யானை சானமாவு வழியாக போடூர் பள்ளம் வந்துள்ளது. 3 யானைகளும் ஓசூர் வனப்பகுதியில் சுற்றி வருவதால் விவசாய நிலங்களுக்கு செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சானமாவுவில் இருந்த 2 யானைகள், பென்னிக்கல், பீர்ஜேபள்ளி பகுதிக்கு சென்றன. அங்கு தக்காளி தோட்டத்தை மிதித்து சேதம் செய்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. யானைகள், ராகி அறுவடையையொட்டியே சானமாவு பகுதிக்கு வருவது வழக்கம். நேற்று ஒற்றை யானை போடூர் பகுதியில் நெல் வயலில் புகுந்து, வயலை சேதப்படுத்தியது. தொடர்ந்து யானைகள் விளைபயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 யானைகளையும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒற்றை யானை தனியாகவும், 2 யானைகள் ஒரு பிரிவாகவும் சுற்றி வருவதால், பீர்ஜேபள்ளி, பென்னிக்கல், போடூர், ராமாபுரம், அம்பலட்டி கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், பகல் நேரத்தில் யானையை கண்டால் உடடினயாக வனத்துறைக்கு தகவல் அளிக்குமாறும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வந்துள்ள 100க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த வாரம் ஜவளகிரிக்கு விரட்டப்பட்ட 60 யானைகள் மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் புகுந்து, இரு குழுக்களாக பிரிந்து நொகனூர் வனப்பகுதியிலும், பேவநத்தம் வனப்பகுதியிலும் அட்டகாசம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நொகனூர் வனப்பகுதியிலிருந்து ஜவளகிரி நோக்கி விரட்டப்பட்ட யானைகள் தாவரகரை, மலசோனை, கேரட்டி, கண்டகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள சோளப்பயிர்களை தின்று அருகில் உள்ள தாவரகரை காட்டில் தஞ்சம் அடைந்துள்ளன.  பேவநத்தம் காட்டில் இருந்த 30 யானைகள் காடுலக்கசந்திரம், திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், பச்சபனட்டி கிராமங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து சூரப்பண்குட்டை பகுதியில் முகாமிட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forests ,Hosur , Hosur, rice, tomatoes, elephants
× RELATED வார விடுமுறை, பள்ளி விடுமுறையை ஒட்டி...