ஏமன் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருமா ? : ஐ.நா.சார்பில் சுவீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை

ஸ்தாக்ஹோம்: ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை நிறுத்துவது தொடர்பாக சுவீடனில் இன்று அமைதி பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

ஏமனில் நீடிக்கும் உள்நாட்டு போர்


ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான அரசு படைகளுக்கும் இடையே நீடித்து வரும் சண்டை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன.

போரால் 1 கோடியே 40 லட்சம் பேர் பாதிப்பு


தற்போது தலைநகர் சனா உட்பட பெரும்பான்மை பகுதி ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் வசம் உள்ளன. அங்கு நிலவி வரும் கடும் போரால் உணவு பொருட்களின் வரத்து குறைந்திருப்பதால் நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இந்த போரில் 56,000 பேர் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இது மட்டுமின்றி காலரா போன்ற கொடிய நோய்களின் தாக்கத்தாலும் பஞ்சம் அதிகரித்ததாலும் எண்ணற்ற குழந்தைகள் நாளுக்கு நாள் செத்து மடிகின்றன.

ஐ.நா.சார்பில் அமைதி பேச்சுவார்த்தை  

இதனைத் தொடர்ந்து அங்கு போர் நிறுத்த நடவடிக்கையில் ஐ.நா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் சண்டை நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை சுவீடனில் இன்று நடக்கிறது. ஐநா. அமைப்பு சுவீடனில் இன்று இரு தரப்பினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் ஹவுத்தி போராட்டக்குழு சார்பில் முகமது அப்துல் சலாம் குழுவினர் கலந்து கொள்கின்றனர். ஏமன் அரசாங்கம் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சுவீடன் தலைநகர் ஸ்தாக்ஹோம் வந்துள்ளனர்.  இந்த பேச்சுவார்த்தை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yemen ,civil war ,Sweden ,Peace talks , Stokholm, negotiation, Yemen, Houthi, civil war, UN, Saudi Arabia
× RELATED சீனாவில் தாக்கம் குறைய தொடங்கிய...