×

ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த விவகாரம் பெண்கள் விடுதிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?

சென்னை: பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த விவகாரம் எதிரொலியாக விடுதி நடத்துபவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சென்னை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில், குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தி குளிப்பது, உடை மாற்றுவது போன்றவற்றை பார்த்து ரசித்துள்ளார். இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் விடுதிகள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து சென்னை கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உரிய அதிகாரியால் அனுமதிக்கப்பட்ட கட்டிடங்களி–்ல மட்டுமே விடுதிகளை தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க வேண்டும். பெண்கள் விடுதியாக இருந்தால் அதன் காப்பாளராக பெண்களை மட்டுமே நியமிக்க வேண்டும். 50 பேருக்கு ஒரு விடுதி காப்பாளரும், 24 மணி நேர பாதுகாவலர்களும் நியமிக்கப்பட வேண்டும். 50க்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கும் இல்லங்களின் வாயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

விடுதியில் தங்கியிருப்பவர்கள் வெளியில் செல்லும் நேரம், உள்ளே வரும் நேரம் ஆகியவற்றை தினசரி வருகை பதிவேட்டில் பதிய வேண்டும். இளம் குழந்தைகள், பெண்களை காண வரும் பார்வையாளர்களின் சந்திப்பு கண்டிப்பாக விடுதி காப்பாளர் முன்னிலையில் நடைபெற வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் பாதுகாவலர்களின் முந்தைய நன்னடத்தை சான்றிதழை உள்ளூர் காவல் துறையில் பெற வேண்டும். மேலும் தீயணைப்பு, காவல் துறை, மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளிடம் உரிய உரிமம் பெற்று இறுதியாக கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான அத்தாட்சியினை பெற்ற பின்னரே விடுதிகளை இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. இந்த உரிமங்களை பெற்று கலெக்டரிடம் பதிவு செய்து கொள்ள வரும் 31ம்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த விடுதிகளில் குறிப்பாக பெண்கள் தங்கும் விடுதிகளில் கலெக்டரிடம் பதிவு செய்ததற்கான சான்றினை அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும்.  

பெண்கள் தங்கும் விடுதிகளில் ரகசிய கேமராக்களை கண்டறிய ஹிடன் கேமரா டிடெக்டர் ஆப் போன்ற செயலிகள் உள்ளன. அவற்றில் உள்ளபடி தங்களது மொபைலில் பொருத்தி கண்காணித்து புகார்கள் அளிக்கலாம். 31ம்தேதிக்கு பிறகு கலெக்டரிடம் பதிவு செய்யாமல் இயங்கி வரும் விடுதிகள் குறித்தும், அதில் குறைகள் இருந்தால் 9444841072 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் புகைப்படங்களுடன் புகார் அளிக்கலாம். அதன் அடிப்படையில் விசாரித்து சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுச்சான்று மற்றும் உரிமம் பெறாதவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Image of a secret camera ,guidelines for women's, accommodation
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...