×

மணலியில் கோயில் குளம் இருக்கு... ஆனா இல்லை... இப்போதான் 4 கோடியில சீரமைச்சாங்க... ஆனா சில மாசத்துலே கரையை காணோமே...: கால்நடைகள் குளிக்கும் இடமான அவலம்

திருவொற்றியூர்: மணலி மண்டலத்தில் ₹4 கோடி செலவில் சீரமைக்கப்பட்ட வேம்புலி அம்மன் கோயில் குளம் ஒரு சில மாதங்களில் கரைகள் உடைந்து பழுதானது.சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 17வது வார்டுக்கு உட்பட்ட கொசப்பூரில் வேம்புலி அம்மன் கோயில் குளம் உள்ளது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், மழை நீர் சேமிப்பு குளமாகவும் பயன்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மாநகராட்சி இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால் சேறும் சகதியுமாக மாறியதோடு செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடந்தது.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குளத்தில் குளிக்க வந்த ஒரு மாணவி சேற்றில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்பேரில், சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் வாரியம் சார்பில் ₹4 கோடி செலவில் வேம்புலி அம்மன் கோயில் குளத்தை தூர்வாரி சுற்றி கரை அமைக்கப்பட்டது. ஆனால், குளம் சீரமைக்கப்பட்டு ஒரு சில மாதங்களிலேயே குளத்தின் கரை உடைந்து போனது. செடி, கொடிகள் முழுமையாக அகற்றவில்லை.

மேலும் உடைந்த  கரை வழியாக சுற்றுவட்டாரத்தில் உள்ள பன்றிகளும், மாடுகளும் இந்த குளத்தில் குளிப்பதால் குளம்  மாசடைந்துள்ளது. திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்டபடி குளம் சீரமைப்பு பணியை செய்யாமல் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, இந்த குளத்தை மீண்டும் முறையாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manali , Temple Pool, Manali,cases ,land
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்