×

அசார் அலி 134, ஆசாத் ஷபிக் 104 பாகிஸ்தான் 348 ரன் குவிப்பு: நியூசிலாந்துக்கு நெருக்கடி

அபு தாபி: நியூசிலாந்து அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன் குவித்து முன்னிலை பெற்றது.ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் வில்லியம்சன் 89, வாட்லிங் 77, ராவல் 45 ரன் விளாசினர்.  பாகிஸ்தான் பந்துவீச்சில் பிலால் ஆசிப் 5, யாசிர் ஷா 3, ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்திருந்தது. அசார் அலி 62, ஆசாத் ஷபிக் 26 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய  இருவரும் சதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 201 ரன் சேர்த்தது. அசார் 134 ரன் (297 பந்து, 12 பவுண்டரி), ஆசாத் 104 ரன் (259 பந்து, 14 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த பாபர் ஆஸம் 14, கேப்டன் சர்பராஸ் 25, பிலால் ஆசிப் 11 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 135 ஓவரில் 348 ரன் குவித்து முதல் இன்னிங்சை இழந்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் சாமர்வில்லி 4, போல்ட், அஜாஸ்  பட்டேல் தலா 2, சவுத்தீ 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 74 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசி. அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்து திணறி வருகிறது.தொடக்க வீரர்கள் ராவல் (0), லாதம் (10) இருவரும் வெளியேறிய நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன் 14 ரன், சாமர்வில்லி 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Azhar Ali 134 ,Asad Shafiq 104 Pakistan 348 Runs ,The New Zealand Crisis , Azar, Pakistan', New Zealand crisis
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ