×

கேசிஆருக்கு கை கொடுக்குமா கஜ்வெல்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தொகுதி கஜ்வெல். டிஆர்எஸ் தலைவரும் இடைக்கால முதல்வருமான சந்திரசேகர ராவ் (கேசிஆர்)  மீண்டும் இத்தொகுதியில் நிற்கிறார். உத்தம் குமார் ரெட்டியின் ஹெசுர்நகர் தொகுதியோடு ஒப்பிடுகையில் கஜ்வெல் தொகுதி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து இருக்கிறார்; அதனால், தொகுதி மக்களிடம் கேசிஆருக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. இதைத் தவிர விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கும் ரைத்து பந்து திட்டம்,  விவசாயிகளுக்கான ரித்து பீமா இன்சூரன்ஸ் திட்டம்,   ஆடுகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு நலப்பணிகள் மூலம்  விவசாயிகள் இடையே நன்மதிப்பை  பெற்றுள்ளார். என்றாலும் கடந்த முறை போல் அவ்வளவு  சுலபமாக கேசிஆர் வெற்றிக் கனியை தட்டிப்  பறிக்க முடியாத நிலையே இப்போது உள்ளது.  கட்சி சார்ந்த பலருக்கே நலத் திட்ட உதவிகள் சென்று சேருவதாக தொகுதிக்குள் ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வராக இருப்பதால் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க முடியாத நிலை உள்ளதாக இப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்கு மாறாக கேசிஆரை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் வி.பிரதாப் ரெட்டி மக்களுடன் மக்களாக ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறார். தொகுதிக்குள் நடக்கும் எல்லா திருமண வைபவங்களுக்கும்  துக்க  காரியங்களுக்கும் நேரடியாக சென்று வருகிறார். தேர்தலை குறி வைத்த  நடவடிக்கையாக இது இருந்தாலும் தொகுதி மக்களுக்கு அவர் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை காங்கிரஸ்,  தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. ஆனால் இம்முறை இரு கட்சிகளும் கூட்டணியாக இணைந்துள்ளன. இதனால், இவருக்கு தெலுங்கு  தேசம், தெலங்கானா ஜன சமிதி, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வாக்குகளும் சேர்த்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவ்வளவு எதிரான அம்சங்கள் இருந்த போதிலும் கடைசி நாளில்தான் தனது தொகுதிக்கு பிரசாரத்திற்கு வந்தார் கேசிஆர். அவருக்கு எதிர்ப்பு அலை சற்று இருந்த போதிலும்  இம்முறை  குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது தொகுதியை அவர் தக்க வைத்து கொள்வார் என்றே   கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gajewel ,Casey , Gajewel , handed to the CASR
× RELATED காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் டிஜிபி உத்தரவு