×

சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் ராஜஸ்தான், தெலங்கானா தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான், தெலுங்கானாவில் வரும் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தெலுங்கானாவில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் பல்வேறு தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் ராம்கார்க் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங் என்பவர் மறைந்து விட்டதால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் மற்ற 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் இன்று பிரதமர் மோடி இரண்டு இடங்களில் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே 5 இடங்களில் பிரச்சாரம் செய்துள்ள நிலையில், இன்று 8 இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவி வருகிறது. இவர்களை தவிர சுமார் 80 கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ராஜஸ்தானில் 4 கோடியே 76 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 51 ஆயிரத்து 965 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 7ம் தேதி நடைபெறும் தேர்தலையொட்டி இப்போதே இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் பணி இன்று முழு வீச்சில் தொடங்குகிறது. ஓட்டுப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகியவற்றுடன் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chhattisgarh ,Madhya Pradesh ,Mizoram ,Rajapaksa ,Telangana , Chhattisgarh, Madhya Pradesh, Mizoram, Uttarakhand, Rajasthan, Telangana, Election campaign
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...