×

திருப்புத்தூரில் ஒரு டன் கலப்பட டீத்தூள் பறிமுதல்

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் ஒரு டன் கலப்பட டீ தூளை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அகிழ்மனைத்தெரு பகுதியில் மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சையது இப்ராஹிம், செல்வம், வேல்முருகன் உள்ளிட்டோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது ஒரு குடோனில் பல கம்பெனிகளின் பெயரில் போலி டீத்தூள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த ஒரு டன் கலப்பட டீத்தூள் மற்றும் 500 கிலோ பேக்கிங் கவர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் குடோனுக்கு சீல் வைத்தனர். விசாரணையில், குடோன் உரிமையாளரான காளையார்கோவில் அருகே வேதியாரேந்தலை சேர்ந்த தர்மராஜ்(50), கடந்த 2 ஆண்டுகளாக கலப்பட டீத்தூளை தயாரித்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறுகையில், ‘‘தர்மராஜ் கடந்த 2 ஆண்டுகளாக இதை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இவர் எந்தவிதமான உரிமமோ, அனுமதியோ பெறவில்லை. பகுப்பாய்வின் அறிக்கையின் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirupathur,Contamination Tea ,seized , Sivagangai
× RELATED புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்