×

வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த தடை கேட்டு வழக்கு: மாநகராட்சி பதில் தர உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி மற்றும் போலீஸ் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கம், தி.நகர், நுங்கம்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளை இணைக்கும் இடமாக வள்ளுவர் கோட்டம் உள்ளது. திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு நினைவிடமாக இது விளங்கி வருகிறது. வள்ளுவர் கோட்டம் அருகே அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், கோடம்பாக்கம் லேக் ஏரியா குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘வள்ளுவர் கோட்டம் அருகே பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. பிரபலமான 4 பள்ளிகள் இந்த பகுதியில் உள்ளன. இந்த பகுதி தெருக்கள் பெரும்பாலும் முட்டுச் சந்துகளாக இருக்கின்றன. இங்கிருந்து பொதுமக்களும், மாணவர்களும் 30க்கு 30 அடி சாலையில்தான் வரவேண்டும். அந்த இடத்தில் தற்போது அரசியல் கட்சிகளும், சமூக சேவை அமைப்புகளும் தர்ணா, உண்ணாவிரதம், போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
 
இதனால், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் அதிக சத்தத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதால் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை விதிக்க வேண்டும். சென்னையில், தர்ணா, உண்ணாவிரதம், போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வள்ளுவர் கோட்டம் அருகே என்ற பெயரை நீக்க வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அரசு பிளீடர் ஆர்.உதயகுமார் ஆஜராகி, ‘‘வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது’’ என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் ஜனவரி 4ம் தேதி சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை போலீஸ் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,court ,demonstration ,Valluvar Division , Valluvar Division, Corporation, High Court, Notice
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...