×

முத்துபேட்டையில் நிவாரண பணிகளில் முறைகேடு கண்டித்து சாலை மறியல்: போக்குவரத்து ஸ்தம்பித்தது

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் நிவாரணம் வழங்குவதில் முறைகேடு நடப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு, கணக்கீடு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் முத்துப்பேட்டை மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த பாண்டி, குன்னலூர், ஆரியலூர், வடசங்கேந்தி, மாங்குடி, மருதவனம், வங்கநகர் ஆகிய கிராமங்களில் நிவாரண பணிகள் முழுமையாக நடைபெறவில்லை என கூறப்படுகிறது.  இதைகண்டித்து முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை. மின்சாரம், குடிநீர் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நிவாரண பணிகளில் ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முத்துப்பேட்டை பாண்டி கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் ஒருவாரத்தில் அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மின் பராமரிப்பு பணிகளை முடித்து அனைத்து கிராமங்களுக்கும், ஒரு வாரத்தில் மின்சாரம் வர நடவடிக்கை எடுக்கப்படும். புயல் பாதித்த அனைத்து பகுதி தென்னை மரங்களுக்கும் நிவாரணம் வழங்க கணக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-முத்துப்பேட்டை சாலையில் 4 மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : road , Relief work,pyramid, Stopping , road
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...