×

அமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் புஷ்சுக்கு டொனால்ட் டிரம்ப் சல்யூட்: இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது

வாஷிங்டன்: மறைந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ்  எச்.டபிள்யு. புஷ் உடலுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா இறுதி மரியாதை செலுத்தினர். புஷ்சின் இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. அமெரிக்காவின் 41வது அதிபராக கடந்த 1989 முதல் 1993ம் ஆண்டுவரை பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (94). ‘சீனியர் புஷ்’ என அழைக்கப்பட்ட இவர், வயது மூப்பால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை ஹூஸ்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது உடலுக்கு அரசு தரப்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக புஷ்ஷின் உடல், ஹூஸ்டனில் இருந்து, தலைநகர் வாஷிங்டனுக்கு கொண்டு வரப்பட்டு கேபிடல் ரோடுண்டா அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.
 
புஷ்ஷின் உடலை கொண்டு வருவதற்காக, அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் ‘ஏர்போர்ஸ் ஒன்’ விமானத்தை அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார். புஷ் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிக்கு, அமெரிக்க தேசியக் கொடி போர்த்தப்பட்டு நேற்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா இருவரும் நேற்று இறுதி மரியாதை செலுத்தினர். புஷ் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி முன்பாக இருவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். டிரம்ப் ‘சல்யூட்’ செய்து மரியாதை செலுத்தினார். சில நிமிடங்களே அங்கிருந்த டிரம்ப், மெலானியா உடனடியாக புறப்பட்டுச் சென்றனர்.

சீனியர் புஷ்சின் உடலுக்கு பல்வேறு முக்கிய தலைவர்களும், அமெரிக்க மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரின் உடலுக்கு அருகே அவருடைய மகனும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் இதர மகன், மகள்கள் குடும்பத்துடன் சோகத்துடன் உள்ளனர்.
வாஷிங்டனில் உள்ள தேசிய கதீட்ரல் தேவாலயத்தில் சீனியர் புஷ்சுக்கு அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. இதிலும் டிரம்ப் பங்கேற்க உள்ளார். அதைத்தொடர்ந்து, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனுக்கு புஷ்சின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

விமர்சித்தவர் புகழ்ந்தார்
தேர்தல் பிரசாரங்களில் டிரம்ப், ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ்சை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் தற்போது டிரம்ப் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘புஷ் மிகச்சிறந்த மனிதர். அமெரிக்காவின் சிறப்பை வெளிப்படுத்தும் முன்னுதாரணமாக தனது வாழ்வை வழி நடத்தியுள்ளார். எந்த சுயநலமுமின்றி, தனது வாழ்நாள் முழுவதையும் உலக நீதிக்காக அர்ப்பணித்தவர்’ என புகழ்ந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Barack Obama ,Donald Trump Salute ,US ,funeral , Former US President, Senior Pushu, Donald Trump, Salute
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!