×

மேகதாது அணை கட்ட தீவிர நடவடிக்கை : கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர்; மேகதாதுவில் புதிய அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருவதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடகம் தீவிரமாக இறங்கியுள்ளது. கர்நாடகத்தின் இந்த செயல் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகம் மற்றும் மத்திய அரசின் துரோகத்தை முறியடிப்பதோடு, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இது பற்றி பேசிய திருவாரூரை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகியான வரதராஜன், தொடர்ந்து காவிரியில் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கிற கர்நாடக அரசுக்கு சாதகமாக மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியை கொடுத்துள்ளது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு இப்படியொரு அனுமதி கொடுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.

மத்திய அரசின் இந்த செயலால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறினார். மேலும் இவ்விவகாரம் குறித்து பேசிய விவசாயி பழனிவேலு என்பவர், டெல்டா விவசாயிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு பலவித இன்னல்களில் உள்ள நேரத்தில் மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு  வரைவு ஒப்புதல் அளித்துள்ளது வேதனை அளிப்பதாக கூறினார்.

தேர்தலில் ஜெயிக்க பாரதிய ஜனதா என்ன வேண்டுமானாலும் செய்யும். ஆனால் இவ்விகாரத்தில் மத்திய அரசின் பிடிவாதம் நீடித்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு விவசாயி கூட அக்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்தார். மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைந்து முடிக்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது. இது பற்றி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில நீர்பாசன துறை அமைச்சர் சிவக்குமார், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக வரும் 7-ம் தேதி தொழில்நுட்ப குழுவினருடன் மேகதாது பகுதிக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meghadad ,Tamil ,Karnataka , Meghatadu, Karnataka State, Tamilnadu farmers
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...