×

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரீசில் போராட்டம்: 400 பேர் கைது

பாரீஸ்: எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரீசில் போராட்டம் நடத்திய 400 பேரை போலீசார் கைது செய்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி அண்மையில் பிரான்சில் உயர்த்தப்பட்டது. இதனால் அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்ந்தன. இதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கார்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.மேலும் வன்முறை கும்பல் துணிக்கடைகளில் கொள்ளை, ஆடம்பர வீடுகள் மற்றும் உணவகங்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தலில் ஈடுபட்டன. கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். அதிபர் ஆலோசனையை அடுத்து அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையில் அமைச்சரவையின் அவசரகூட்டம் நடந்தது.

போராட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் வரிகளை குறைப்பது, விலைவாசியை கட்டுப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 249 இடங்களில் தீவைத்து, அரசு மற்றும் தனி நபர்களின் சொத்துகளை சேதப்படுத்தியதாக 400 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். பாரீஸ் பார்லிமென்டை ஆம்புலன்ஸ்களுடன் வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ்களை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவற்றை அப்புறப்படுத்தினர். வன்முறையை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் எட்வர்ட் பிலிப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிரான்சின் அண்மைக்கால வரலாற்றில் இது போன்ற வன்முறை ஏற்பட்டதில்லை என அங்குள்ள ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : protest ,Paris , Protest,Paris,fuel price,increases,400 arrested
× RELATED இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக்...