×

சொத்து எழுதிவாங்கிய பிள்ளைகள் சோறு போடவில்லை : 70 வயது மூதாட்டி கலெக்டரிடம் கண்ணீர் புகார்

வேலூர்: காட்பாடி கழிஞ்சூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் எலிசபெத்(70), இவர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நேற்று கலெக்டர் ராமனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘எனது கணவர் கனகராஜ் முன்னாள் ராணுவவீரர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு 3 மகன்கள், 2 பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. என்னுடைய நகைகளை விற்று நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு ஒன்று வாங்கினேன். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது பிள்ளைகள் தனித்தனியாக வீடு கட்டுவதாகவும் அதில் எனக்கு ஒரு தனி அறை கட்டுவதாகவும் வாக்குகொடுத்தனர். அதனை நம்பி நானும் எனது பிள்ளைகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக சொத்துக்களை பிரித்துக்கொடுத்தேன்.

புதிய வீடு கட்டும் முன் எனது இளைய மகன் சொத்துக்களை பிரித்து கொடுத்த 3வது வாரத்திலேயே அவருக்கு கொடுத்த சொத்து பாகத்தை எதிர்வீட்டுக்காரருக்கு ரகசியமாக விற்று விட்டு, தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார். அந்த சொத்தினை வாங்கியவர்கள் தற்போது வீட்டை இடிக்க வருகிறார்கள். அப்படி செய்தால் எனக்கு தங்குவதற்கு இடம் இல்லை. மற்ற பிள்ளைகளிடம் தங்குவதற்கு இடம் கேட்டால் அவர்களும் இடம் கொடுக்க மறுக்கின்றனர். வயதான காலத்தில் உண்ண உணவு, தங்க வீடு இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தவிக்கிறேன். எனவே நான் என் பிள்ளைகளுக்கு தானமாக எழுதிக்கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து, வீட்டை என் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.  மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

திருவண்ணாமலைபோல் வேலூரில் கிடைக்குமா?


திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிள்ளைகள் சோறுபோடாமல் தனித்துவிட்ட பெற்றோருக்கு பிள்ளைகளிடமிருந்து, சொத்துக்களை மீட்டு வயதான பெற்றோருக்கே திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி பட்டா வழங்கினார். இதுதொடர்பான செய்தியை பத்திரிகைகளில் பார்த்த மூதாட்டி, தனக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்துள்ளார். நேற்று குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்து திருவண்ணாமலை கலெக்டர் போல என்னுடைய மனு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் வந்திருந்தார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,collector ,mourner , Children, maternity, collector
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...