×

தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி விவசாயி படுகாயம் : கிராம மக்கள் பீதி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே ஒற்றை யானை தாக்கியதால், விவசாயி படுகாயமடைந்த சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து, கடந்த மாதம் 50க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வழியாக தேன்கனிக்கோட்டை, சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகளை, கடந்த வாரம் ஜவளகிரி வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். இந்நிலையில், கடந்த 1ம் தேதி 50க்கும் மேற்பட்ட யானைகள், மீண்டும் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு திரும்பின.

தாவரக்கரை, மலசோனை, கேரட்டி, ரங்கசந்திரம் உள்ளிட்ட கிராமப் பகுதியையொட்டி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை, பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், மாரசந்திரம், லக்கசந்திரம் வழியாக யானைகளை மரகட்டா காட்டிற்கு இடம்பெயரச் செய்தனர். பின்னர், அங்கிருந்து நேற்று முன்தினம் நொகனூர் பகுதிக்கு விரட்டியபோது, வழியில் ராகி, சோளம் உள்ளிட்ட பயிர்களை யானைகள் நாசம் செய்தன. இந்நிலையில், நொகனூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்த பைரப்பா(55) என்பவரை, கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை தாக்கியது.

அதிர்ஷ்டவசமாக அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், யானை கூட்டம் ஓசூர் நோக்கி படையெடுத்ததால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டனர். நேற்று அதிகாலை, யானைகளை மடக்கி காடுலக்கசத்திரம் வழியாக பேவநத்தம் வனப்பகுதிக்கு விரட்டினர். இதையடுத்து, யானைகள் சூரப்பன்குட்டை வனப்பகுதியை கடந்து சென்று வட்டவடிவு பாறை பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் மீண்டும் ஓசூர் நோக்கி படையெடுக்காமல் தடுக்க, வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : peasant ,Dhenkanikkottai , Denkanikottai, elephant, farmer
× RELATED பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி...