×

டாக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் மோசடி போலி சித்தர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் `இடைக்காட்டு சித்தர்’’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து திருவண்ணாமலையை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வழிபாடு நடத்தி வருகிறார். தன்னையும் ஒரு சித்தர் என கூறி வந்த கோவிந்தராஜ் மீது, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி யுவராஜ் (29) என்பவர் உட்பட பலர், திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜி.மகிழேந்தி, செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் நேற்று முன்தினம்  கிரிவலப்பாதையில் உள்ள `இடைக்காட்டு சித்தர்’’ ஆசிரமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கோவிந்தராஜ் ஒரு போலி சித்தர் என்பதும், போலியான ஆவணங்களை வைத்து ஆசிரமம் நடத்தி வந்ததும், நன்கொடை என்ற பெயரில் பக்தர்களிடம் பணம் பெற்று வந்ததும் தெரிந்தது. மேலும், அவர் அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோவிந்தராஜ் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்யுமாறு திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கார்த்தி யுவராஜ், திருவண்ணாமலை தாலுகா போலீசில், ஆசிரம நிர்வாகி கோவிந்தராஜ் மீது புகார் அளித்தார். அதில், தனக்கு டாக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி 5.40 லட்சம் பெற்றதாகவும், பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தராமல் அலைக்கழிப்பதாகவும், பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து ஆசிரம நிர்வாகி கோவிந்தராஜை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siddar ,doctor , Doctor's job, fraud, fake Siddhar, arrested
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...