×

7 பேர் விடுதலையை தாமதம் செய்யும் பன்வாரிலாலை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை : கி.வீரமணி, வைகோ, முத்தரசன், திருமா உள்ளிட்டோர் கைது

சென்னை: 7 பேர் விடுதலையை தாமதம் செய்வதை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கி.வீரமணி, வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் தற்போது வரை 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேரை எரித்து கொன்ற வழக்கில் அதிமுகவை சேர்ந்த 3 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் பரிசீலனைக்கு கவர்னர் அனுமதி அளித்தார். இதனால் அவர்கள் 3 பேரும் சிறையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் மதிமுக மற்றும் திராவிடர் கழகம் சார்பில் நேற்று கவர்னர் அலுவலகம் முற்றுகை போராட்டம்  நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று காலை 10 மணியளவில் சின்னமலை வேளச்சேரி சாலையில்  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பல்வேறு கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில், திமுக சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன் எம்பி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாக்கியம், எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக், மமக மாநில செயலாளர் அப்துல் சமது, தேசிய லீக் தலைவர் மோனிகா பஷீர் உட்பட 17 இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். இதில் அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர். அதை தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பேரி கார்டுகள் அமைத்து தடை ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகையிட முயன்ற கி.விரமணி, வைகோ, முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் ேபாலீஸ் வேனில் ஏற்றப்பட்டு கிண்டி  ரேஸ்கோர்சில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 5.30 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ‘ராஜீவ் காந்தி கொலைக்கும், 7 பேருக்கும் சம்பந்தம் இல்லை. 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் கவர்னரை தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஆய்வு செய்ய விடமாட்டோம். எந்த ஊருக்குள்ளும் அவரால் நுழைய முடியாது. தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம்
அவரை ராஜ்பவனை விட்டு வெளியேற்ற வேண்டும். இப்போதுள்ள மத்திய அரசு அவரை வெளியேற்றாது. ஆனால், அடுத்து வரும் மத்திய அரசு கவர்னரை தூக்கி வெளியே போடும் ’’ என்றார். மேலும், இந்திய கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் உள்பட பலர் பேசினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,Siege ,release ,Vaiko ,K.Veeramani ,Mutharasan ,Thirumma , 7 people released, K.Verramani, Vaiko, Mutharasan, Thirumai, arrested
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...