×

ஆளும் கட்சியை ஆட்டிப்படைத்தவரின் பினாமி நிறுவனங்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு: ஆவணங்களை கொடுக்க சுவிஸ் அரசு ஒப்புதல்

சென்னை: ஆளும் கட்சியை ஆட்டிப்படைத்தவரின் பினாமி நிறுவனங்கள் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் தகவலை அந்த நாட்டு அரசு விரைவில் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் செய்யும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள  கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி தேர்தலின் போது அறிவித்தார்.  அதன்படி கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
கருப்பு பணம் மீட்பது தொடர்பாக சுவிஸ் அரசுடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து பணம் பதுக்கி வைத்துள்ள நிறுவனங்களின் பட்டியலை இந்திய அரசு தயாரித்து அவற்றின்  விவரங்களை சுவிஸ் அரசிடம் கேட்டுள்ளது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று சுவிஸ் அரசும் குறிப்பிட்ட நிறுவனங்களின் விவரங்களை தர தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மும்பையை சேர்ந்த ஜியோ டெசிக் லிமிடெட் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் நிவாஸ்தவா,  பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோர் பற்றிய விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது. அதோடு சென்னையை சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விவரங்களையும் இந்திய அரசு கேட்டுள்ளது. இரு  நாடுகளுக்கும் இடையேயான நிர்வாக ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் மேற்கண்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பற்றிய விவரங்களை இந்திய அரசுக்கு அளிக்க சுவிஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித்துறை ஒப்புதல்  அளிப்பதாக தெரிவித்துள்ளது.மேற்கண்ட நிறுவனங்களை பொறுத்தவரையில் சென்னையை சேர்ந்த ஆதி எண்டர் பிரைசஸ் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் மற்றும் வேறு பல வர்த்தக  நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அந்த நிறுவனம் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் பின்னணியில் ஆளும் கட்சியை ஆட்டிப் படைத்து வந்த குடும்பத்தினர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆதி நிறுவனம் கருப்பு பணம் வைத்துள்ளதாக கருதி வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். ஆனால் அந்த நிறுவனம் கருப்பு பணம் தொடர்பாக மறுப்பு தெரிவித்து  வருவதுடன் தாங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை என்றும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் ஆதி நிறுவனத்துக்கு, மொரீஷியஸ் நாட்டின் பேக்டோலஸ் நிறுவனத்திடம் இருந்து ₹250 கோடி முதலீடாக,  நிலம் வாங்கித் தருவதற்காக  பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சுவிஸ் அரசின் வரித்துறை, இந்திய அரசுக்கு ஆதி நிறுவனத்தின் விவரங்களைத் தர முன்வந்துள்ள நிலையில், மேல் முறையீடு செய்து கொள்ளவும்  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுவிஸ் அரசு, ஆதி நிறுவனம் குறித்து முழுமையான தகவல்களை வெளியிட்டால், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Swiss ,governments ,party , ruling party, Swiss,r proposals, documents
× RELATED பஞ்சுமிட்டாயில் நஞ்சு கலப்பு…