×

திம்பம் மலைப்பாதையில் 12 சக்கர லாரிகள் செல்ல தடை விதிக்க பரிந்துரை

சத்தியமங்கலம்: திம்பம்மலைப்பாதையில் 12 மற்றும் 16 சக்கரங்களை கொண்ட டாரஸ் லாரிகள் செல்ல தடை விதிக்க அரசுக்கு போக்குவரத்து வட்டார அதிகாரிகள் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இந்த திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓசூருக்கு அடுத்தபடியாக இருமாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து கர்நாடகா, மற்றும் வடமானிலங்களுக்கு இச்சாலை வழியாக சரக்கு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இப்பாதையில் 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை.

  ஆனால் 40 முதல் 50 டன் வரை பாரம் ஏற்றிய 12 மற்றும் 16 சக்கர லாரிகளும் அனுமதிக்கப்படுவதால், அதிக பாரம் காரணமாக நடுவழியில் லாரி பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்து ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதன் காரணமாக பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருமாநில போக்குவரத்து முடங்குவதோடு, பஸ்சில் செல்லும் பயணிகள் மற்றும் தாளவாடி பகுதியிலிருந்து சத்தியமங்கலம், ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

  அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை அனுமதிக்காமல் இருந்தால் இப்பிரச்னைக்கு தீர்வுகாண முடியும் என்றாலும், அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வதோடு நின்றுவிடுகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் 3 நாட்கள் தொடர்ந்து போக்குவரத்து முடங்கியது. இந்நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அதிக நீளமுள்ள பாடிகள் கொண்ட 12 மற்றும் 16 சக்கரங்கள் பொருத்திய லாரிகளை திம்பம் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்க வட்டார போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென அரசு உத்தரவிற்காக பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mountain range ,Thimphu , Thimba mountain pathway, wheel trucks, recommend
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...