×

வெள்ளியங்கிரி 7வது மலையில் தீபம் ஏற்ற வனத்துறை அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி

கோவை: வெள்ளியங்கிரி 7வது மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு 48 நாட்கள் தீபம் ஏற்ற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை அருகே பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலின் மேலே 6 மலைகளை கடந்த 7வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி இடம் பெற்றுள்ளது. இது வனத்துறைக்குட்பட்ட இடமாகும். இங்கு ஆண்டுதோறும் கிருத்திகை தீப நாளில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த பக்தர்கள் 2 ஆயிரம் பேர் வரை சென்று, அங்கு நாலரை அடி உயர கொப்பரையில் தீபம் ஏற்றுவது வழக்கம். இந்நிலையில், பேரூரை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில், வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றுவதால் வனப்பகுதி சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது, தீபம் ஏற்ற தடை விதிக்க வேண்டும், என்று பொது நல வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்ற ஐகோர்ட் இந்த ஆண்டு வெள்ளியங்கிரி 7வது மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தது.

இதற்கிடையில், கார்த்திகையை முன்னிட்டு 7வது மலையில் 48 நாட்கள் தீபம் ஏற்றும் வழக்கத்தை கொண்டிருந்த செம்மேடு பகுதி மக்களுக்கும் ஐகோர்ட் தடையை காரணம் காட்டி தீபம் ஏற்ற வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் கடந்த 2 வாரமாக இப்பகுதி மக்கள் தீபம் ஏற்ற செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் இப்பகுதி மக்களுக்கு தீபம் ஏற்ற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் இப்பகுதியை சேர்ந்த 5 பேர் வெள்ளியங்கிரி 7வது மலைக்கு சென்று தீபம் ஏற்றினர். அவர்கள் நேற்று திரும்பியதை தொடர்ந்து, நேற்று 5 பேர் வெள்ளியங்கிரி மலைக்கு தீபம் ஏற்ற சென்றனர். தொடர்ந்து சுழற்சி அடிப்படையில் பக்தர்கள் சென்று 48 நாட்கள் தீபம் ஏற்றி வர முடிவெடுத்துள்ளனர். தீபம் ஏற்ற அனுமதியளித்துள்ளதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வனத்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா கூறியதாவது: செம்மேடு மக்கள் பாரம்பரியமாக வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை மாதம் 48 நாட்கள் விளக்கேற்றுவது வழக்கம். விளக்கேற்றுவதன் மூலம் இப்பகுதி மக்களும், வனப்பகுதியும் பாதுகாக்கப்படும், என்று அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷிடம் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற மாவட்ட வன அலுவலர் விளக்கேற்ற அனுமதியளித்துள்ளார். அதனால் மாவட்ட வன அலுவலரின் வாய்மொழி உத்தரவின் பேரில், தலா 3 பேர் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று விளக்கேற்ற அனுமதியளித்துள்ளோம். அவர்களுடன் பாதுகாப்பிற்கு வனத்துறை ஊழியர்களும் செல்கின்றனர். இவ்வாறு பழனிராஜா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest ,lighthouse ,mountain ,devotees ,Velliangiri , Velliyankiri, 7th hill, lamp, forest clearance, pilgrims and happiness
× RELATED கூடலூர், முதுமலை வனப்பகுதியில் கனமழை..!!