டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்தால் தான் மேகதாதுவில் அணை கட்ட முடியும் என மசூத் ஹுசைன் தெரிவித்துள்ளார். டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழக பிரதிநிதிகள், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டதற்கு தங்களது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
இக்கூட்டம் முடிவடைந்ததையடுத்து காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் ஜனவரியில் நடைபெறும். காவிரிநீர் பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நல்ல மழை பெய்ததால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அதிக தண்ணீர் கிடைத்துள்ளது. மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டும் விவகாரம் பற்றி தமிழக பிரதிநிதிகள் பேசினர். தமிழகத்தின் எதிர்ப்பை காவிரி மேலாண்மை ஆணையம் கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
மேகதாது அணை திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கும். மேகதாதுவில் அணை கட்ட நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை. எங்களிடம் அனுமதி பெறாமல் அங்கு அணை கட்ட முடியாது. அணை கட்டுவதற்கான விவர அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடகத்துக்கு அனுமதி தரப்பட்டது. மேகதாது அணை சாத்தியக்கூறு அறிக்கை ஆணையத்தின் ஒப்புதலை பெற்றாக வேண்டும். இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி