×

சாலை விதிகளை கடைபிடிக்காததால் பைக்கில் உணவு சப்ளை செய்பவர்களுக்கு ‘செக்’: போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றாக சென்னை இருக்கிறது. இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பணி, படிப்பு, தொழில் நிமித்தமாக தங்கியிருக்கிறார்கள். இவர்கள் தங்களது உணவை  பெரும்பாலும் ஓட்டல்களிலேயே வாங்கி சாப்பிடுகிறார்கள்.இதில் ஒருசிலர் மூன்று வேலை உணவையும் ஓட்டலிலேயே சாப்பிடுவது வழக்கம். இவர்களை ‘குறி’வைத்து சில தனியார் நிறுவனங்கள், தங்களுக்கென்று பிரத்தியேக ‘ஆப்’களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த‘ஆப்’மூலம் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த ஹோட்டல் மற்றும் உணவு வகைகளை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கான தொகையை ‘கேஷ் ஆன் டெலிவரி’, மொபைல் பாங்கிங், இன்டர்நெட் பேங்கிங் மூலம்  செலுத்தலாம்.இதற்கு 50 சதவீதம் வரை கேஷ் பேக் ஆபர், இலவச டெலிவரி வசதி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. மேலும் ஓட்டலில் துவங்கி வீட்டிற்கு வரும் வரை தாங்கள் ஆர்டர் செய்த உணவு எங்கு வருகிறது என்பதையும்  ஆர்டர் செய்தவர் அறிந்து கொள்ள முடியும். இதனால் சம்மந்தப்பட்ட ‘ஆப்’களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது. தினந்ேதாறும் ஏராளமானோர் ‘ஆர்டர்’ செய்து சாப்பிடுவதால் அவர்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் வேலைக்கும்  ஏராளமான இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் உணவுப்பொருட்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதால், மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனங்களை இயக்குவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு சிலர் சாலைகளில் உள்ள சிக்னல்  உள்ளிட்ட விதிகளை கடைபிடிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மட்டும் இல்லாமல் சாலையில் பயணிக்கும் சகவாகன ஓட்டிகளும் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், போலீசாரும் சம்மந்தப்பட்ட இளைஞர்களை  அழைத்து எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பலர் அதை கடைபிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து போக்குவரத்துத்துறை ஆணையர் சமயமூர்த்தி கூறுகையில், ‘‘உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும் இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து  அவர்களை அழைத்து  சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க ஆங்காங்கு  பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது’’ என்றார்.

ஹெல்மட்டுக்கு ‘கடிவாளம்’ வருமா?
உணவு பொருட்களை விநியோகம் செய்யும் இளைஞர்கள் பலர் சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். குறிப்பாக, ‘ஹெல்மட்’ அணியாமல் பலர் வாகனத்தை ஓட்டுகின்றனர். சமீபத்தில்கூட தமிழக  அரசு வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என உத்தரவிட்டது. அப்படியிருக்கும் சூழ்நிலையில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் ஹெல்மட் அணியாமல் வாகனத்தை இயக்கி வருவதை தடுக்க வேண்டும். அதற்காக போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், ேபாலீசாரும் விழிப்புணர்வு  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : traffic commissioner ,food suppliers ,road , Do not ,rules , road, bike, Transport Commissioner orders
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை