×

விளிஞ்சியம்பாக்கத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் வீட்டு மனைகளாக ஏரி விற்பனை: வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம்

ஆவடி: ஆவடி அருகில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்த காரணத்தால், சமூக விரோதிகள் பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.  ஆவடி அருகே சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், விளிஞ்சியம்பாக்கம் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரியை சுற்றி, நந்தவனம் மேட்டூர், சுரக்காபாளையம், பாரதிதாசன் நகர், வேட்டைக்காரன்பாளையம்,  தேவி நகர், சேக்காடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. காலப்போக்கில் குடியிருப்புகளில் வெளியான கழிவுநீர் இந்த ஏரியில் விடப்பட்டதால், தண்ணீர் மாசடைந்தது. இதனால், ஏரிநீர்  குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘விளிஞ்சியம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் கருமாரியம்மன் கோயில் பிரதான சாலை, காமராஜ்நகர் மெயின்ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சலவையாளர் குடியிருப்பு  வழியாக 3 கி.மீ தூரம் கடந்து பருத்திப்பட்டு ஏரியை சென்றடைகிறது.முதலில் 25அடி அகலமாக இருந்த கால்வாய் தற்போது, ஆக்கிரமிப்பு அதிகரித்து 6 அடியாக சுருங்கி விட்டது.

இதனால் மழைக்காலத்தில் உபரிநீர் வெளியேற வழிகள் இல்லாமல் பாண்டியன் தெரு, சரஸ்வதி தெரு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரு, வள்ளலார் தெரு, நேரு காலனி, வீட்டுவசதி குடியிருப்பு ஆகிய பகுதியில் வெள்ளம்  சூழ்ந்து விடுகிறது. இந்த ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் கடந்த சில ஆண்டுகளாக ஏரியை சுற்றி ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. நீர் பிடிப்பு பகுதியில் வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன.  மேலும் கடந்த 2 ஆண்டுகளாக மழை, சரிவர இல்லாத காரணத்தால் சில சமூக விரோதிகள் ஏரியை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

40 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்புகள்
இதனை தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இதனால் தற்போது ஏரியில் 40 ஏக்கருக்கும் மேலாக குடியிருப்புகளாக மாறியுள்ளது. வருவாய்த்துறை பதிவேட்டில் 63 ஏக்கர் பரப்பளவில்  ஏரி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் வரும்காலத்தில் ஏரியை வரைபடத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசு
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஏரியை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்படுவதால் நீர்ப்பிடிப்பு பகுதி சுருங்கிக்கொண்டே வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்பட்டும், குப்பைகளும்  போடப்பட்டு வருகிறது. இதனால் ஏரி கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. மழைக் காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகம் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : flooding homes , negligence, public service ,Vunjiniyampakkam, Lakes, flooding homes
× RELATED செங்கல்பட்டு, மறைமலைநகர் சுற்றியுள்ள...