×

தலைநகர் வாஷிங்டனில் அஞ்சலி செலுத்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புஷ் உடலை எடுத்து வர முடிவு: அதிபர் டிரம்ப் சிறப்பு மரியாதை

வாஷிங்டன்: நேற்று முன்தினம் மறைந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்திலிருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு கொண்டு வருவதற்காக தனது ஏர்போர்ஸ் ஒன் போயிங்  விமானத்தை அதிபர் டிரம்ப் அனுப்புகிறார். அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்த ‘சீனியர் புஷ்’ என அழைக்கப்படும், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ் (94) நேற்று முன்தினம் மறைந்தார். தனது பதவிக்காலத்தில் இவர் மிகப்பெரிய சாதனைகளை செய்தவர்.  ரஷ்யாவுடன் பல ஆண்டுகளாக நிலவிக் கொண்டிருந்த ‘பனிப்போரை’, அப்போதைய ரஷ்ய அதிபர் கோர்ப்சேவுடன் இணைந்து முடிவுக்கு கொண்டு வந்தார். குவைத்தை ஈராக் ஆக்கிரமித்தபோது, அதை விரட்டியடுத்து  குவைத்தை மீட்டார். இதனால், இவர் ‘வளைகுடா போர் நாயகன்’ என பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.

வயது மூப்பு மற்றும் பர்கின்சன் என்ற நரம்பு தளர்ச்சி நோயால் இறந்த சீனியர் புஷ்சின் உடல், தற்போது டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகரில் உள்ளது. இவரது உடல் தலைநகர் வாஷிங்டனுக்கு கொண்டு வரப்பட்டு, அரசு  மரியாதை அளிக்கப்பட உள்ளது. இதனால், அவருடைய உடலை சுமந்து வருவதற்கு அதிபர் டிரம்ப் தனது ஏர்போர்ஸ் ஒன் விமானத்தை அனுப்பி வைக்க உள்ளார். ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதிபர் டிரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அர்ஜென்டினா சென்றிருந்தார். அவர் வாஷிங்டன் திரும்பியதும் இந்த விமானம், சீனியர் புஷ் உடலை எடுத்துச் செல்ல புறப்படும். இது  குறித்து டிரம்ப் விடுத்துள்ள செய்தியில், ‘நானும் எனது குழுவினரும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வாஷிங்டன் திரும்பியதும், மறைந்த புஷ் உடலை எடுத்து வர ஹூஸ்டனுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சிறப்பு  மரியாதைக்கு சீனியர் புஷ் மிகவும் தகுதியானவர்’’ என்றார். அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள் பயன்படுத்தும் கவுரமான விமானம்தான் ‘ஏர்போர்ஸ் ஒன்’.வாஷிங்டனில் உள்ள தேசிய தேவாலயத்தில் இன்று  வைக்கப்படும்  புஷ் உடலுக்கு அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்பின் பொது மக்கள் அஞ்சலிக்காக சீனியர் புஷ் உடல் யு.எஸ்.ேகபிடல் ரோட்டுண்டா அரங்கில் இரண்டு நாட்கள்  வைக்கப்படுகிறது. பிறகு அடக்கம் செய்வதற்காக அவரது உடல் மீண்டும் டெக்சாஸ் காலேஜ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bush ,President ,Washington , Pay tribute, capital, Bush decided, President Drump special respect
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...