×

வேகத்துக்கு சாதகமாக அடிலெய்டு ஆடுகளம்...: பராமரிப்பாளர் தகவல்

அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான அடிலெய்டு மைதான ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் புற்களுடன் கூடியதாக இருக்கும் என்று பராமரிப்பாளர் டேமியன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து 4 போட்டிகள் கொண்ட கடினமான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு சவாலாக விளைங்கும் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள  நிலையில், அடிலெய்டு மைதான ஆடுகள பராமரிப்பாளர் டேமியன் ஹாப் கூறியதாவது:இந்த மைதானத்தில் கடைசியாக 3 பகல்/இரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. அவற்றில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டதால், பந்து முழுமையாக 80 ஓவர் தாக்குப்பிடிக்கும் வகையில் ஆடுகளத்தில் லேசாக புற்கள்  இருக்குமாறு பார்த்துக் கொண்டோம். தற்போது இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டி பகல் ஆட்டமாக நடைபெற்றாலும், ஆடுகள அமைப்பில் எந்த வித மாற்றமும் இருக்காது.

அதே வகையிலான தயாரிப்பு பணிகளையே கடைப்பிடிக்க உள்ளோம். ஒரே வித்தியாசம், ஆடுகளத்தை மூடியிருக்கும் தார்பாய் கவர்களை முன்கூட்டியே அகற்ற வேண்டியிருக்கும். அதே போல ஆட்டமும் காலையிலேயே  தொடங்கும். அவ்வளவுதான். உள்ளூர் போட்டிகளில் சிவப்பு பந்து, பிங்க் பந்து இரண்டுக்குமே ஒரே மாதிரியான ஆடுகளத்தையே அமைப்போம். பிச்சில் லேசாக புற்களை விட்டுவைக்கும்போது பேட்டிங், பந்துவீச்சுக்கு சம அளவில்  ஒத்துழைக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு டேமியன் கூறியுள்ளார்.
இதனால், இரு அணிகளுமே வேகப் பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிகிறது.ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அடங்கிய வேகக் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்திய  அணியிலும் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பூம்ரா, இஷாந்த் ஷர்மா என திறமை வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளதால், அடிலெய்டில் அனல் பறப்பது உறுதி.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pitch ,Adelaide , Adelaide pitch ,favor , speed ,caretaker information
× RELATED நிறுவனம், ஊழியர் இருதரப்பும் ஹேப்பி...