×

அரசு உத்தரவை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்திய டாஸ்மாக் கடை, பாருக்கு சீல்

* அதிகாரிகள் நடவடிக்கை
* பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: அரசு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய டாஸ்மாக் கடை மற்றும் பாருக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது. இதை மீறி பயன்படுத்தும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. மேலும் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாடு ஜனவரி முதல் ஒழிக்கப்படும் என்று அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் கேரி பேக் உள்பட பலவும் விற்பனை செய்யவும், வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதையும் பல்வேறு நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஒரு டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவதாக நேற்று முன் தினம் இரவு செங்கல்பட்டு தாசில்தார் பாக்கியலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சி மாவட்ட டாஸ்மாக் இணை ஆணையர் மற்றும் தாசில்தார் பாக்கியலட்சுமி உட்பட வருவாய் துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு 9.00 மணியளவில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மற்றும் அருகே உள்ள பார் பகுதிக்கு வந்தனர். அங்கு அதிகளவில் பிளாஸ்டிக் டம்ளர், வாட்டர் பாக்கெட் கழிவுகளாக மலைப்போல குவித்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.

இதையடுத்து அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக டாஸ்மாக் கடை மற்றும் பாரை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதை அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக மருத்துவமனை எதிரே இருந்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைத்ததால்அனைத்து தரப்பினரும் கொண்டாடுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : plastic,used,tasmac,banned ,government order,sealed,bar
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...