×

இன்று 2வது நாள் தேர் பவனி கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா நாளை நிறைவு

நாகர்கோவில்: கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா நாளை நிறைவடைகிறது. நேற்று நடந்த தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலய பெருவிழா கடந்த 24ம் தேதி ெகாடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலிகள் நடந்து வருகின்றன. நேற்று (1ம்தேதி) 8ம் திருவிழாவையொட்டி இரவு 10.30க்கு தேர் பவனி நடந்தது. மேள தாளங்கள் முழங்கவும், பேண்டு வாத்தியங்கள் இசைக்கவும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்கள் வலம் வந்தன. முதலில் காவல் சம்மனசானவர், செபஸ்தியார் ஆகிய சொரூபங்கள் தாங்கிய தேர்கள் வந்தன. அதன் பின், புனித சவேரியார் சொரூபத்தை தாங்கிய தேர் வந்தது. தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருந்தனர்.

அவர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி காணிக்கையாக செலுத்தினர். தேருக்கு பின்னால் கும்பிடு நமஸ்காரம் செய்து வணங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் கம்பளம் சந்திப்பு, ரயில்வே ரோடு சந்திப்பு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது.இன்று (2ம்தேதி) 9ம் திருவிழா நடக்கிறது. இதையொட்டி மாலையில் சிறப்பு மாலை மற்றும் ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார். பின்னர் இரவில் தேர் பவனி நடக்கிறது. இன்று (ஞாயிறு) என்பதால், காலை முதல் தேவாலயத்தில் பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டதால், கோட்டாறு சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

கன்னியாகுமரி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பீச்ரோடு, ஆயுதப்படை ரோடு சந்திப்பு, பொன்னப்பநாடார் காலனி, ராமன்புதூர், செட்டிக்குளம் வழியாக நாகர்கோவில் வந்தன. வடசேரி, அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் வேப்பமூடு சந்திப்பு, பொதுப்பணித்துறை அலுவலக சாலை, செட்டிக்குளம் சந்திப்பு, இந்து கல்லூரி சாலை, பீச் ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த போக்குவரத்து மாற்றம் நாளை இரவு வரை அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாளை (3ம் தேதி) 10ம் திருவிழா நடக்கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசேரன் சூசை கலந்து கொள்கிறார். காலை 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெறுகிறது. இதில் திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட நீதித்துறை ஆயர் பதில்குரு கிளாடின் அலெக்ஸ் பங்கேற்கிறார்.  காலை 11 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.  9, 10ம் நாள் திருவிழாவையொட்டி இன்றும், நாளையும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், டி.எஸ்.பி. இளங்கோ தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10ம் நாள் திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நாளை (3ம்தேதி) உள்ளூர் விடுமுறை ஆகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Chariyari Parvani Kottaru Holy Saviar Paralayam , Chariwaram, Kattar, Holy Saviar Paralaya festival
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...