×

தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிராக 5 மண்டலங்களில் போராட்டம்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக வரும் 18ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 5 மண்டலங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம்(ஏ.ஐ.டி.யூ.சி) அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக பொதுச்செயலாளர் டி.எம். மூர்த்தி, மாநிலத்தலைவர் நா.பெரியசாமி, பொதுசெயலாளர் த.தனசேகரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதன்பிறகு நா.பெரியசாமி கூறியதாவது: ஆய்வு எனும் பெயரில் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள். இதை கண்டித்தும், ஆய்வுகளை முறைபடுத்தவும் ஆய்வறிக்கை நகலை அலுவலர்களின் கையெழுத்துடன் கடை பணியாளருக்கு வழங்க கோரியும் வரும் 18ம் தேதி சென்னை மண்டலத்திலும், 21ம் தேதி சேலம் மண்டலத்திலும், 22ம் தேதி கோவை மண்டலத்திலும், மதுரையில் 2019ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, திருச்சியில் 4ம் தேதிகளிலும் மண்டல அளவிலான தர்ணா போராட்டங்கள் நடைபெறும். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனவரி 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பெரும் திரளாக பங்கெடுப்பார்கள். தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கு கொள்கைபடி கடைகளை மூடுவதால் உபரி பணியாளர்கள் உருவாகிறார்கள்.

எனவே, இவர்களுக்கு மாற்றுபணியாக அரசின் பிறதுறைகளில், கல்விதகுதி அடிப்படையில் பணிமூப்புடன் நிரந்தர அரசு பணிவழங்கிடவும், அதுவரை அரசு பணியாளருக்கு இணையான ஊதியம், இ.எஸ்.ஐ மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 பிப்ரவரி 19ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி சென்று முதல்வரிடம் முறையிட உள்ளோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மறுவாழ்வு நிதியாக ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதில் காலந்தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தலைமை அலுவலக ஆய்வை காரணமாக கொண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : zones , Tasmac employees union,
× RELATED பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி...