×

சதம் விளாசினார் முரளி விஜய் பயிற்சி ஆட்டம் டிரா

சிட்னி: இந்தியா - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதிய  4 நாள் பயிற்சி ஆட்டம், எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. 2வது நாள் டாஸ் வென்ற ஆஸி. லெவன் பந்துவீச, இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பிரித்வி ஷா 66, புஜாரா 54, கேப்டன் கோஹ்லி 64, ரகானே 56, விஹாரி 53, ரோகித் ஷர்மா 40 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய ஆஸி. லெவன், 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்திருந்தது. நீல்சன் 56 ரன், ஹார்டி 69 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹார்டி 86 ரன்னில் ஆட்டமிழக்க, சதம் விளாசிய நீல்சன் சரியாக 100 ரன்னில் (170 பந்து, 9 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார்.

பால்லின்ஸ் 43 ரன், கோல்மேன் 36 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆஸி. லெவன் 151.1 ஓவரில் 544 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ராபின்ஸ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஷமி 3, அஷ்வின் 2, உமேஷ், இஷாந்த், கோஹ்லி, பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 186 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல்.ராகுல் - முரளி விஜய் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தது. ராகுல் 62 ரன் (98 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஷார்ட் பந்துவீச்சில் பிரையன்ட் வசம் பிடிபட்டார்.

அடுத்து விஜய் - விஹாரி இணை 2வது விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்தது. அதிரடியாக சதம் விளாசிய முரளி விஜய், 129 ரன் (132 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பால்லின்ஸ் பந்துவீச்சில் கிளீன்போல்டானார். இந்தியா 43.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. விஹாரி 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murali Vijay , Century, Murali Vijay
× RELATED இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஓய்வு