×

2001- 2017 காலக்கட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் அண்டார்டிகா பகுதியில் ஏற்பட்ட ஓசோன் ஓட்டை சீராகி வருகிறது

கொல்கத்தா,: அண்டார்டிகா பகுதியில் ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய ஓட்டை சீராகி வருவதாக காரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஆக்சிஜன் மூலக்கூறுகளால் ஆன பாதுகாப்பு அடுக்கு உள்ளது. இதுதான், சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக பூமியை தாக்காமல் பாதுகாக்கிறது. ஆனால், புவி வெப்பம், சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் இந்த ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இது, நாளுக்குநாள் அதிகமாகி வருவதால்தான் உலகில் வெப்பம் அதிகரித்து, வெப்பநிலைகள் தாறுமாறாக மாறி வருகின்றன. அண்டார்டிகா பகுதியிலும் ஓசோன் மண்டலத்தில் மிகப்பெரிய ஓட்டை ஏற்பட்டு இருந்தது. இந்த பகுதியில் கடந்த 1987ம் ஆண்டு அடர்த்தி குறைவு ஏற்பட்டது. இது, ஓசோன் மண்டல ஓட்டை என அழைக்கப்பட்டது.

இதையடுத்து, உலகம் முழுவதும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்நிலையில், ஓசோன் மண்டலம் பற்றிய ஆராய்ச்சியில் காரக்பூர் ஐஐடி.யைச் சேர்ந்த ‘கோரல்’ மைய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். இந்த மையம் கடல், ஆறுகளில் சுற்றுச்சூழலை ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுவில் உள்ள பேராசிரியர் ஜெய நாராயணன், பங்கஜ் குமார், பிரிஜிதா நாயர் மற்றும் பி.சி.பாண்டே ஆகியோர் ஓசோன் ஆராய்ச்சியில் இறங்கினர். இதற்காக கடந்த 1979ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரையிலான ஓசோன் மண்டலத்தின் அடர்வு பற்றிய தகவல்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். அண்டார்டிகா பகுதியில் கடந்த 1987ம் ஆண்டு, ஓசோன் அடர்வு குறைவு பகுதி 12 முதல் 21 கிமீ தூரம் வரை இருந்தது.

ஆனால், கடந்த 2001ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, கிடைத்த தகவல்களை ஆராய்ந்த போது ஓசோன் அடர்த்தி பாதிப்பு 20 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஓட்டை விழுந்த ஓசோன் மண்டல பகுதி சீராகி வருவது, காரக்பூர் ஐஐடி மைய ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது. ஓசோன் அடர்த்தியை அளவிடும் ‘ஓசோன்ஸ்சோண்ட்ஸ்’ என்ற கருவி மூலமும், செயற்கைகோள் அளவீடுகள் மூலமும் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஜெயநாராயணன் கூறுகையில், ‘‘கடந்த 40 ஆண்டு கால ஓசோன் மண்டல அடர்த்தியை நாங்கள் ஆராய்ந்ததில், 2001-2017 கால கட்டத்தில் ஓசோன் ஓட்டை வெகுவாக குறைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. மாசு கட்டுப்பாட்டுக்காக அமல்படுத்தப்பட் ‘மான்ட்ரியல்’ ஒழுங்குமுறைகள்தான் ஓசோன் படலத்தை பாதுகாத்துள்ளது’’ என்றார். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் பாண்டே கூறுகையில், ‘‘ஓசோன் மண்டலம் மிக மெதுவாக சீராகி வருவகிறது. ஓசோன் ஓட்டை முற்றிலும் சீராக இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,ozone layer ,Antarctica , Antarctica, ozone hole
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு