×

மாணவிகள் கொலுசு அணிவதால் மாணவர்களின் கவனம் திசை திரும்பும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கோபி: ஈரோடு மாவட்டம், கோபியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்  723 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 26 லட்சம் மதிப்பிலான இலவச சைக்கிள்களை பள்ளிகல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன்   நேற்று வழங்கினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:  11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி  இறுதிக்குள் இலவச லேப்டாப் வழங்கப்படும். மேலும் மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் தலா 20 லட்சம் மதிப்பீட்டில் ஜனவரி 15ம் தேதிக்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். இந்தாண்டு நீட் நுழைவு தேர்வுக்கு 26 ஆயிரம் மாணவ,மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கஜா புயல் பாதிப்பால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 15 நாள் கூடுதல் கால அவகாசம்  அளிக்கப்பட்டது.

8-ம் வகுப்பு மாணவர்கள் அரசு உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்வுக்கும் 15 நாள் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தேர்வு மையங்கள் மண்டல வாரியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. முறைகேடு குறித்து ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

சிறப்பாசிரியர்கள் காலிப்பணிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மாணவிகள் கொலுசு மற்றும் பூ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த கேள்வி இதுவரை எனது கவனத்திற்கு வரவில்லை. மாணவிகள் கொலுசு அணிந்து வரும்போது மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும். பூ வைப்பதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottian ,interview , Students, Students, Minister Chengottai
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு